கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், ரெஜிநகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தரப்பு வேட்பாளர் ரபியுல் ஆலம் சவுத்ரி, 66, நேற்று திடீரென, வேட்புமனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். எனினும், சில மணி நேரங்களுக்கு பின், அந்த முடிவை திரும்ப பெற்றார். நந்திகிராம் தொகுதியில் மம்தா நிறுத்திய வேட்பாளர் சஞ்சிதா பிரதான், வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், ரபியுல் ஆலம் சவுத்ரியும் முன்னுக்கு முரணாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்த லில் அடைந்த தோல்வியால், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., இரண்டாக பிளவுபட்டது. அக்கட்சியின் மொத்தமுள்ள, 80 எம்.எல்.ஏ.,க்களில், 60 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., ரிதபிரதா பானர்ஜிக்கு ஆதரவு அளி க்கின்றனர். அவர், சட்டசபை எதிர்க்கட்சித் தலை வராக உள்ளார். இந்த சூழலில், நந்திகிராம், ரெஜிநகர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அக்., 6ல் நடக்கிறது. இதில், மம்தா தரப்பும், ரிதபிரதா தரப்பும் திரிணமுல் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி யதால், கட்சியின் பெயர், 'புற்கள், இரு பூக்கள்' என்ற சின்னத்தை இரு தரப்பும் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடை விதித்தது. இதையடுத்து, மம்தா தரப்புக்கு, 'மம்தா அகில இந்திய திரிணமுல் காங்.,' என்ற பெயரும், 'கால்பந்து வீரர்' என்ற சின்ன மும், ரிதபிரதா தரப்புக்கு, 'ஜனநாயக திரிணமுல் காங்.,' என்ற பெயரும், 'தபால் உறை' சின்னமும் ஒதுக்கப்பட்ட து. தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில், நந்திகிராம் தொகுதி மம்தா தரப்பு வேட்பாளர் சஞ்சிதா பிரதான், முதல்வர் சுவேந்து அதிகாரியை நேற்று முன்தினம் சந்தித்தார். தொடர்ந்து, தன் வேட்புமனுவையும் அவர் திரும்ப பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், ரெஜிநகர் தொகுதியில் மம்தா தரப்பில் களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ., ரபியுல் ஆலம் சவுத்ரி, நேற்று காலை திடீரென வேட்புமனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். எனினும், சில மணி நேரங்களுக்கு பின், அந்த முடிவை திரும்ப பெற்றார். இது குறித்து, ரபியுல் ஆலம் சவுத்ரி கூறுகையில், ''இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என, முதலில் முடிவு செய்தேன். மம்தா பானர்ஜி அளித்த ஊக்கத்தால் அந்த முடிவை தற்போது திரும்ப பெறுகிறேன். பிரசாரத்தின் போது எனக்கும், என் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர். கட்சி தொண்டர்களின் பாதுகாப்பே எனக்கு முக்கியம். 10 பேர் பிரசாரத்துக்கு வந்தாலே எளிதில் வென்று விடுவேன்,'' என்றார். அக்., 3 வரை நீதிமன்ற காவல் நந்திகிராம் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ஹசிராணியை எதிர்த்து, காங்., வேட்பாளர் மிலன் பிரதான் களமிறங்குகிறார். தன் தரப்பு வேட்பாளர் சஞ்சிதா பிரதான் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், மிலன் பிரதானுக்கு ஆதரவளிப்பதாக மம்தா அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே, 19 ஆண்டுகள் பழைய வழக்கில், மிலன் பிரதானை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, புர்பா மெதினிபூர் மாவட்டத்தின் ஹால்டியா சப் - டிவிஷனல் நீதிமன்றத்தில், அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை அக்., 3 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் மம்தா வழக்கு திரிணமுல் காங்கிரசின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தேர்தல் கமிஷன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரிதபிரதா பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.