| ADDED : நவ 21, 2025 06:38 AM
புதுடில்லி: 'மத்திய, மாநில அரசுகள், தங்களின் செலவுகளை பதிவு செய்வதில் ஒரே மாதிரியான தலைப்புகளை பயன்படுத்தும் நடைமுறையை விரைவில் துவங்க வேண்டும். 'இந்த புதிய முறை, 2027 - 28 நிதியாண்டுக்குள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்' என, நாட்டின் தலைமை தணிக்கை அமைப்பான சி.ஏ.ஜி., அறிவுறுத்தியுள்ளது. தற்போது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் செலவுத் தலைப்புகள் மற்றும் துணைத்தலைப்புகளில் உள்ள வேறுபாடுகளை நீக்கி, கணக்குப் பதிவு மற்றும் ஆய்வுகளை நாடு முழுதும் ஒரே மாதிரியாக இருக்கச் செய்யும் நோக்கத்துடன் சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் பரிந்துரை வழங்கியுள்ளது. இதற்காக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலக ஊழியர்கள், சில மாநில அரசுகளின் நிதித்துறை ஊழியர்கள் அடங்கிய பணிக்குழு அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் மற்றும் பணிக்குழுவின் பரிந்துரைப்படி, மத்திய, மாநில அரசுகள் 'முக்கிய செலவினங்கள்' என்ற பெயரில் பொதுவான செலவின கணக்குகளை பராமரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து ஏற்கனவே பல தரப்புகளில் விவாதங்கள் நடந்துள்ளதாகவும், பல்வேறு பெயர்களில் செலவு தரவுகள் பதியப்படுவதால், காலகட்ட அடிப்படையிலான ஒப்பீடுகள், மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் மற்றும் மத்திய அரசுடன் செய்யப்படும் ஒப்பீடுகள் ஆகியவற்றிலும் பிழைகள் நேர்வதாக சி.ஏ.ஜி., துணை தலைவர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்து உள்ளார்.