எதிர்க்கட்சிகள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை, மோடி அரசு நிறைவேற்ற வேண்டும் என்று, நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் நிர்பந்தம் கொடுப்பதால், பாரதிய ஜனதாவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.கூட்டணி ஆட்சி என்பது வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாக இருக்கும்; நெருக்கடிகள் தொடர்ந்து வரும் என்பதே பா.ஜ.,வின் நிலைப்பாடு.மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை, இந்த அடிப்படையில் தான் பா.ஜ., கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால், இப்போது கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைமை அக்கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது. பா.ஜ., தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில், முக்கிய கட்சிகள் ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேசமும். ஐ.ஜ.த.,வின் தலைவர் நிதீஷ் குமாரும், தெ.தே.தலைவர் சந்திரபாபு நாயுடுவும் சமீபத்தில் தான் இக்கூட்டணியில் இணைந்தனர்.எதிர்த்தனர்அதற்கு முன், மோடி அரசின் பல திட்டங்களை எதிர்த்து வந்தனர். குறிப்பாக அக்னிவீர் திட்டம், யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டங்களை காங்கிரஸ் போலவே கடுமையாக எதிர்த்தனர். தவிர, பா.ஜ.,வுக்கு உடன்பாடு இல்லாத ஜாதிவாரி கணக்கெடுப்பு யோசனையையும் இவர்கள் ஆதரித்தனர்.பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுத்தவர் நிதீஷ் குமார். தற்போது, பா.ஜ.,வுடன் சேர்ந்துள்ள நிலையில், அதே கொள்கைகளை மோடி அரசும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆட்சி அமைப்பதற்கு முன்னரே இத்தகைய நிர்பந்தம் வரும் என்பதை, பா.ஜ., எதிர்பார்க்கவில்லை. நாயுடுவும், நிதீஷும் வெளிப்படையாக இதுகுறித்து பேசவில்லை.அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள் பேட்டி வாயிலாக வலியுறுத்துகின்றனர். தலைமையின் ஒப்புதலுடனே, அவர்கள் அவ்வாறு பேட்டி அளிப்பதாக பா.ஜ., சந்தேகிக்கிறது. கூட்டணி உள்ளேயே எதிர்க்கட்சிகளா என்ற தர்மசங்கடத்தில் தவிக்கிறது.இதைத்தவிர, வாய்ப்பே இல்லாத பல கோரிக்கைகளையும் இவ்விரு கட்சிகளும் முன்வைத்துள்ளன. சபாநாயகர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், ரயில்வே அமைச்சர், ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர் போன்ற மிக முக்கியமான பதவிகளை கேட்கின்றனர். இவற்றை விட்டுக்கொடுக்க பா.ஜ., சம்மதிக்காது என்று தெரிந்தும், அழுத்தம் கொடுக்கின்றனர். சந்திரபாபு நாயுடு, தன் மகன் நர லோகேஷை, நிர்மலா சீதாராமன் இடத்தில் அமர்த்த ஆசைப்படுகிறார். அமித் ஷாவின் உள்துறை மீது நிதீஷ் குமார் கண் வைக்கிறார். பதவிகள் தவிர, தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்றும் இருவரும் கேட்கின்றனர்.திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு, நிடி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளதால், எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று தெரிந்தும் பிடிவாதம் செய்கின்றனர்.தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பையே கேட்கிறார் நாயுடு.அமைச்சர் பதவிஅது தவறினால், கூட்டணி அரசுக்கான குறைந்தபட்ச பொது செயல்திட்ட குழுவை உருவாக்கி, அதன் அமைப்பாளர் பதவியை தரச் சொல்கிறார். இவர்கள் இருவர் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் தலைவர்களும், முக்கியமான அமைச்சர் பதவிகளுக்கு குறி வைக்கின்றனர்.சிராக் பஸ்வானுக்கு ரயில்வே மீது கண். அவருடைய அப்பா வகித்த பொறுப்பு. தேவகவுடா மகன் குமாரசாமி, வேளாண் துறை அமைச்சராக விரும்புகிறார். இப்படி பெரிய லிஸ்டே டில்லியில் சுற்றுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு, 32 குறைவாக பெற்றுள்ள பா.ஜ.,வுக்கு, 16 தொகுதிகளில் வென்றுள்ள தெலுங்கு தேசம், 12ல் வென்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு நிச்சயம் தேவை. அதற்காக, பா.ஜ., எவ்வளவு துாரம் இறங்கி வரும் என்பது தெரியவில்லை.'நாயுடுவும், நிதீஷ் குமாரும் வாஜ்பாயுடன் அரசியல் செய்தவர்கள். ஆனால், மோடியை வாஜ்பாயாக மாற்ற நினைக்கும் அவர்களின் முயற்சி பலிக்காது' என்கிறார் ஒரு தலைவர்.
ஞாயிறன்று பதவியேற்பு?
தே.ஜ., கூட்டணி அரசு, ஞாயிறு மாலை பதவி ஏற்கலாம் என தெரிகிறது. கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்படுவார். பதவியேற்பு விழா குறித்து அமித் ஷா, ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினர். ஆந்திர முதல்வராக ஞாயிறன்று பதவியேற்க இருந்த நாயுடு, அதை 12ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
ஜல்தி கீஜியே...
மோடியை சந்தித்து பேசி விட்டு கிளம்பும் போது, ஜல்தி கீஜியே... என்று சத்தமாக சொன்னாராம் நிதிஷ் குமார். சீக்கிரம் செய்யுங்க, சீக்கிரம் முடிங்க என்று நாம் சொல்வது போன்ற ஹிந்தி பதம் அது. எதை சீக்கிரம் முடிக்க சொல்கிறார் என்று கேட்டால், ஆளாளுக்கு ஒரு மேட்டர் சொல்லி, அதுவாகத் தான் இருக்கும் என்கின்றனர். தெளிவாக எவராலும் சொல்ல முடியவில்லை. இதுவே டில்லியின் இப்போதைய நிலவரம்.- நமது நிருபர் குழு-