உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வை மிரட்ட சந்திரசேகர ராவ் திட்டமிட்டது... அம்பலம்!

பா.ஜ.,வை மிரட்ட சந்திரசேகர ராவ் திட்டமிட்டது... அம்பலம்!

ஹைதராபாத் : அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன் மகளை காப்பாற்றுவதற்காக, பா.ஜ., மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் மீது வழக்கு தொடர தெலுங்கானா முதல்வராக இருந்தபோது, பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முயன்றார் என, முன்னாள் போலீஸ் அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடந்தபோது, அரசியல் பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்ததது. இது தொடர்பாக, ஹைதராபாத் முன்னாள் துணை போலீஸ் கமிஷனர் ராதாகிஷன் ராவ் கைது செய்யப்பட்டார். சந்திரசேகர ராவின் நம்பிக்கைக்கு உரியவராக இவர் இருந்து வந்தார்.இந்நிலையில், டில்லி அரசின் மதுபான கொள்கை மோசடி தொடர்பாக, சந்திரசேகர ராவின் மகள் கவிதா மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.

நெருக்கடி

கடந்த, 2020ல், பாரத் ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த, நான்கு எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., முயன்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் ராமசந்திர பாரதி, நந்து குமார், சிம்மயாஜி சுவாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.தன் மகள் மீது, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, இந்த எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில், பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்க சந்திரசேகர ராவ் முயன்றதாக, ராதாகிஷன் ராவ் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துஉள்ளார்.பா.ஜ.,வின் அமைப்புச் செயலரான பி.எல். சந்தோஷை இந்த வழக்கில் சேர்த்து, அவரை கைது செய்யும்படி, 'பெத்தண்ணா' எனப்படும் பெரிய அண்ணனான சந்திரசேகர ராவ் தனக்கு உத்தரவிட்டதாக ராதாகிஷன் ராவ், வாக்குமூலத்தில் கூறிஉள்ளார்.இதற்கிடையே இந்த வழக்கை, மாநில போலீசிடம் இருந்து சி.பி.ஐ.,க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்ததுடன், கைது செய்த மூவரையும் ஜாமினில் விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேரம்

பி.எல்.சந்தோஷை கைது செய்து, அவரை விடுவிக்க வேண்டுமானால், மதுபான கொள்கை மோசடி தொடர்பான வழக்கில் தன் மகள் கவிதாவை விடுவிக்கும்படி, பா.ஜ.,வுடன் பேரம் பேச சந்திரசேகர ராவ் திட்டமிட்டிருந்ததாக வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.இது தெலுங்கானா அரசியலில் புதிய புயலை ஏற்படுத்திஉள்ளது.

ஜாமின் வழங்க எதிர்ப்பு!

டில்லி அரசின் மதுபான கொள்கை மோசடி வழக்கில், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, மார்ச், 15ல் கைது செய்யப்பட்டார். சட்டமேலவை உறுப்பினராக உள்ள அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, 50 பேரில், இவர் மட்டுமே பெண். இதனால், பெண் என்ற அடிப்படையில் ஜாமின் வழங்க வேண்டும் என்று அவருடைய சார்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஜாமின் மனு மீதான தீர்ப்பை, உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்தி வைத்தது.முன்னதாக, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., சார்பில் வாதிடப்பட்டதாவது:மிகப் பெரும் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர், தெலுங்கானா சட்டமேலவை உறுப்பினராகவும் உள்ளார். மேலும், இந்த மோசடியில் முக்கிய பங்காற்றிஉள்ளார். மதுபான லைசென்ஸ்கள் பெறுவதற்காக, 100 கோடி ரூபாய்க்கும் மேல் அவர் லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும், இதன் வாயிலாக பெரும் பணபலனை அடைந்து உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அரசியல் அதிகாரம் உள்ளதால், ஜாமினில் விட்டால், அது வழக்கின் விசாரணையை பாதிக்கும். மேலும், சாட்சிகள் மிரட்டப்படுவதற்கு வாய்ப்புள்ளது. பெண் என்பதற்காக ஜாமின் கோர முடியாது. அவருடைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு வாதிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
மே 29, 2024 05:34

ஓவராக ஆட்டம் போட்டதை பொது மக்கள் புரிந்துகொண்ட ஓரமாக உட்கார வைத்து விட்டார்கள்.


J.V. Iyer
மே 29, 2024 02:30

யம்மாடி இவைங்க எல்லோரையும் கழுவில்தான் ஏற்றவேண்டும். இவருக்கு நல்ல சாவே வராது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை