மும்பை: மும்பையில், பிரதான குழாய் சேதமடைந்ததால் சி.என்.ஜி., வினியோகம் பாதிக்கப்பட்டு, விற்பனை நிலையங்களில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மஹாராஷ்டிராவின் மும்பையில், 2002 முதல் சி.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது பஸ், ஆட்டோ, டாக்ஸி என, 12.30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சி.என்.ஜி.,யை பயன்படுத்தி இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 'மஹாநகர் காஸ்' என்ற நிறுவனம், மும்பை, நவி மும்பை, தானே உள்ளிட்ட நகரங்களில் குழாய்கள் மூலம் சி.என்.ஜி.,யை வினியோகித்து வருகிறது. இதன் மூலம் ஏராளமான குடியிருப்பு வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மும்பைக்கு இயற்கை எரிவாயு வினியோகிக்கும் பிரதான குழாய் நேற்று முன்தினம் சேதமடைந்ததால், வினியோகம் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் விற்பனை குறைத்தும், பல இடங்களில் உள்ள நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதன் காரணமாக சி.என்.ஜி.,யை நிரப்ப, ஆட்டோக்கள், டாக்ஸிகள் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தன. நேற்று திங்கட்கிழமை என்பதால் பள்ளி, கல்லுாரி பஸ்கள் இயக்குவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதேபோல் அலுவலகம் செல்லும் பலர் தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப முடியாமல் தவித்தனர். மும்பை முழுதும் சி.என்.ஜி.,க்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆட்டோ, டாக்ஸிகளின் வாடகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டன. இதனால், அந்த வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.