விமான தாமத பிரச்னைக்கு தீர்வு காண 6 விமான நிலையங்களில் கட்டளை மையம்
புதுடில்லி, நாட்டில், குறிப்பாக வட மாநிலங்களில் கடும் பனிமூட்டத்தால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவது, அதனால் பயணியர் பாதிக்கப்படுவது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், விமான போக்குவரத்து துறை அமைச்சகம் புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளது.புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உ.பி., உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. வாக்குவாதம்
இதன் காரணமாக, விமானங்கள் புறப்பாடு, வந்தடைவது தாமதமாவதால், பயணியர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் அதிருப்தி அடையும் பயணியர், ஒரு கட்டத்தில், விமான ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். ஒரு சிலர் கைகலப்பில் ஈடுபடுகின்றனர்.சமீபத்தில், புதுடில்லியில் இருந்து கோவாவுக்கு, 'இண்டிகோ' நிறுவனத்தின் விமானம், 10 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டு சென்றது. முன்னதாக, அந்த விமானத்தின் தாமதம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட துணை விமானியை, பயணி ஒருவர் சரமாரியாக தாக்கினார். பின், விமான ஊழியர்கள் அளித்த புகாரின்படி அந்த பயணி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, விமானியை பயணி தாக்கிய சம்பவத்துக்கு, அவர் கண்டனம் தெரிவித்தார். இக்கூட்டத்தில், பயணியரின் சிரமத்தை உடனடியாக தீர்க்கும் வகையில், ஆறு மெட்ரோபாலிட்டன் நகர விமான நிலையங்களில், விமான நிலையங்கள் - விமான நிறுவனங்கள் இடையே, கட்டளை மையத்தை அமைப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புதுடில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கோல்கட்டா, சென்னை ஆகிய ஆறு மெட்ரோ விமான நிலையங்கள், அன்றாட சம்பவங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை, அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.மேலும், விமான நிறுவனங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக கடைப்பிடிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.இதன்படி, விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பான துல்லியமான நிகழ்நேரத் தகவலை வெளியிட வேண்டும். விழிப்புணர்வு
விமான நிலையத்தில் விமான தாமதங்கள் குறித்து, பயணியருக்கு சரியான முறையில் விளக்கவும், தொடர்ந்து வழிகாட்டவும், விமான ஊழியர்களுக்கு உரிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். மேலும், விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணியருக்கு, விமான தாமதங்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை, விமான நிறுவனங்கள் காண்பிக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை, டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து இயக்குனரகம் கண்காணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.
'இண்டிகோ'வுக்கு நோட்டீஸ்
கோவாவில் இருந்து புதுடில்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நீண்ட நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது. ஆனால், பனிமூட்டம் காரணமாக புதுடில்லி செல்ல முடியாமல், மும்பையில் தரையிறங்கியது. கீழே இறங்கிய பயணியர் விமான நிலையத்தின் உள்ளே செல்லும் வரை பசி தாங்க முடியாமல், விமான ஓடுதளத்திலேயே தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பாதுகாக்கப்பட்ட பகுதியான விமான ஓடுதளத்தில் பயணியர் உணவு சாப்பிட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி இண்டிகோ நிறுவனத்துக்கும், மும்பை விமான நிலையத்துக்கும் விமான பாதுகாப்பு பணியகம் நோட்டீஸ் அனுப்பியது.