உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய்யான ஜாதி சான்றிதழ் தாக்கல் செய்த காங். - எம்.எல்.ஏ.வுக்கு என்ன தண்டனை?

பொய்யான ஜாதி சான்றிதழ் தாக்கல் செய்த காங். - எம்.எல்.ஏ.வுக்கு என்ன தண்டனை?

கோலார்: கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், முன்பு 2013 மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் தனித் தொகுதியான முல்பாகலில் போட்டியிட்டார். எஸ்.சி. வகுப்பினர் என்பதற்கான ஜாதிச்சான்றிதழை தாக்கல் செய்து, போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார்.இவர், 'பைராகி' என்ற பிற்படுத்தப்பட்டோர் ஏ பிரிவைச் சேர்ந்தவர். தன்னை எஸ்.சி. பிரிவுக்கு உட்பட்ட 'புடக ஜங்கமா' ஜாதியைச் சேர்ந்தவர் என்று பொய்யான சான்றிதழை அளித்திருந்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பாக, முல்பாகலைச் சேர்ந்த முனி ஆஞ்சினப்பா என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, 'புடக ஜங்கமா' ஜாதியைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களை மஞ்சுநாத் சமர்ப்பிக்கவில்லை.எனவே அவருக்கு எதிராக 2017ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2018 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தில் மஞ்சுநாத் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2021ல் கோலார் மாவட்ட கலெக்டர் தலைமையிலான ஜாதி பரிசீலனைக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டது.விசாரணை அறிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.கோலார் மாவட்ட விசாரணைக்குழு நடத்திய விசாரணையில், கொத்தூர் மஞ்சுநாத் மற்றும் அவரின் குடும்ப பரம்பரையினர் யாரிடமும் 'புடக ஜங்கமா' ஜாதியினர் என்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அனைவரிடமும் 'பைராகி' என்ற பிற்படுத்தப்பட்டோர் ஏ பிரிவு ஜாதிச் சான்றிதழைத்தான் வைத்துள்ளனர். எனவே மஞ்சுநாத் தாக்கல் செய்த ஜாதிச்சான்றிதழ் பொய்யானது' என, 2022ல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.இந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி நாக பிரசன்னா தலைமையிலான கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு விசாரணை நடத்தி 57 பக்க தீர்ப்பை கடந்த டிசம்பர் 20ல் வழங்கியது. நீதிமன்ற தீர்ப்பு நகல் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.தீர்ப்பில், 'எஸ்.சி., ஜாதியினருக்கென இடஒதுக்கீடு செய்யப்பட்ட முல்பாகல் தனித் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக பொய்யான ஜாதிச் சான்றிதழை மஞ்சுநாத் அளித்துள்ளார். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. கொத்துார் மஞ்சுநாத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கையை அரசே தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஜாதி பரிசீலனைக்குழுவின் விசாரணை முடிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்க முடியாது' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.காங்கிரஸ் எம்.எல்.ஏ., மஞ்சுநாத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அவர் மீது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு எத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை