கபினி அணைக்கு வந்த வெளிநாட்டு விருந்தினர்கள்
மைசூரு மாவட்டம், வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு மட்டுமின்றி, வெளிநாட்டு அபூர்வ பறவைகளுக்கும் பிடித்தமானது. ஆண்டு தோறும் குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள், இங்கு வருகின்றன. ஆறு மாதம் தங்கி இன விருத்தி செய்து, தம் சொந்த நாட்டுக்கு திரும்புவது வழக்கம். இப்போதும் ஏராளமான பறவைகள் வந்துள்ளன. சுற்றுலா பயணியரை குஷிப்படுத்துகின்றன.குளிர்காலம் என்பதால், மைசூரு, எச்.டி.கோட்டேவின், கபினி அணைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன. இவற்றில் வானம்பாடிகள் எண்ணிக்கை அதிகம். இதன் ஆங்கில பெயர், 'பார் ஹெடன் கூஸ்'. இவைகளும் வெளிநாட்டு பறவைகளாகும். பார்ப்பதற்கு வாத்துகள் போன்று தென்படும். ஆனால் வானத்தில் பறப்பதில், வாத்துகளை விட அதிகமான திறன் கொண்டவை. பறவைகள் கூட்டம்
கபினி அணை பகுதியில் கூடாரம் போட்டுள்ள பறவைகள், மங்கோலியா, சைபீரியா, மத்திய ஆசியா, திபெத், லடாக், நேபால், சீனா, ஹிமாலயா, பர்மா, இலங்கை உட்பட, வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளன. குறிப்பாக பனி பிரதேசங்களில் இருந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கபினி அணையை பார்க்க செல்லும் சுற்றுலா பயணியருக்கு, பறவைகள் தீவனம் தேடுவது, கூடு கட்டுவதில் ஈடுபட்டுள்ள காட்சிகள் தென்படுகின்றன.எச்.டி.கோட்டேவுக்கு செல்லும் சுற்றுலா பயணியருக்கு, நாகரஹொளே, பண்டிப்பூரில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உட்பட வன விலங்குகள், அடர்ந்த காடுகளின் தரிசனம் கிடைத்தது. ஆனால், பறவைகள் அதிகமாக தென்பட்டதில்லை, ஆனால் இப்போது கபினி அணையில் கூட்டம், கூட்டமாக வெளி நாட்டு பறவைகள் பறக்கும் காட்சிகள் மனதுக்கு இதமளிக்கின்றன.அணையின் ஓரத்தில், சிப்பாய்கள் போன்று ஒழுங்குடன் நடமாடும், குளிர் காயும், உணவு தேடி சுற்றுப்புற வயல்களில் பறக்கும் அழகான காட்சிகள் தென்படுகின்றன. உள்நாடு, வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பறவைகள், குளிர்காலம், கோடைக்காலத்தை இங்கேயே கழிக்கின்றன.முட்டையிட்டு, குஞ்சு பொறித்து இவைகள் பறக்க துவங்கும் நேரத்தில், மழைக்காலம் துவங்கும். அதன்பின் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுகின்றன.பல ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் இருந்து வரும் பறவைகள், இங்குள்ள விவசாயிகளுக்கு நண்பர்களை போன்று செயல்படுகின்றன. பறவைகள் தினம் பொழுது விடிந்த பின், விவசாயிகளின் வயல், தோட்டங்களுக்கு செல்கின்றன. அங்கும், இங்கும் நடமாடி கீழே சிதறி இருக்கும் தானியங்களை உண்கின்றன. புற்களையும் தின்கின்றன. சுற்றுச்சூழல்
வெயில் ஏற துவங்கியதும், கபினி அணைக்கு வருகின்றன. நீரில் விளையாடுகின்றன. மாலையானதும் சிறிது நேரம் தீவனம் தேடி செல்லும். சில நேரத்தில் இரவிலும் கூட தீவனம் தேடி செல்வதுண்டு.நிலத்தில் பறவைகளின் எச்சம், உரமாக பயன்படுகிறது. இது விவசாயிகளுக்கு அனுகூலம் என்பதால், பறவைகளுக்கு விவசாயிகள் எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன், விவசாயிகள் பறவைகளை விரட்டும் போது, சில பறவைகள் இறந்தன. இதனால் பயந்து பறவைகள் இங்கு வருவதை நிறுத்தின. தற்போது யாரும் தொந்தரவு கொடுக்காததால், ஐந்தாறு ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. மைசூருக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணியர், மறக்காமல் கபினி அணைக்கு செல்லுங்கள். அற்புதமான காட்சிகளை காணலாம்- நமது நிருபர் -.