| ADDED : மார் 19, 2024 11:04 PM
ஆனேக்கல், : காதலி குடும்பத்தினர் மிரட்டியதால், பிளேடால் கையை அறுத்தும், துாக்குப் போட்டும் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரு ரூரல் ஆனேக்கல் நஞ்சாபூர் கிராமத்தில் வசிப்பவர் இந்திரகுமார். இவரது மனைவி ராதா. இந்த தம்பதியின் மகன் ஹர்ஷித், 23. ஆனேக்கல்லில் கல்லுாரியில் படித்து வந்தார். அதே கல்லுாரியில் படிக்கும் துமகூரை சேர்ந்த மிருதுளா என்ற மேகா, 22, என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. பெற்றோர் இல்லாத மிருதுளா, துமகூரில் தாய்மாமா வீட்டில் தங்கி படித்து வந்தார்.ஹர்ஷித்தை காதலிப்பது பற்றி அறிந்ததும், மிருதுளாவை அவரது அத்தை கவிதா கண்டித்துள்ளார். காதலை கைவிடும்படி அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஹர்ஷித்துடன் பேசுவதை, மிருதுளா தவிர்த்தார்.இரண்டு நாட்களுக்கு முன்பு ஹர்ஷித்திடம் மொபைல் போனில் பேசிய மிருதுளாவின் குடும்பத்தினர், 'மிருதுளாவுக்கு வேறு இடத்தில், மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்து வைக்க உள்ளோம். ஏதாவது பிரச்னை செய்தால், நடப்பதே வேறு' என மிரட்டியதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, ஹர்ஷித் பெற்றோர் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் தனியாக இருந்த அவர், பிளேடால் கையை அறுத்தார். அதை புகைப்படம் எடுத்து, மிருதுளாவின் 'வாட்ஸாப்'பிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற பெற்றோர் வீடு திரும்பியதும், துாக்கில் தொங்கிய மகனை பார்த்து, கதறி அழுதனர்.இந்திரகுமார் அளித்த புகாரில், மிருதுளா, கவிதா ஆகியோர் மீது வழக்குபதிவாகி உள்ளது.