உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் முன்னேற்றத்துக்கான செயல் திட்டங்கள் தயாரிக்க குழு அமைப்பு; முதல்வர் நிதிஷ்குமார்

பீஹார் முன்னேற்றத்துக்கான செயல் திட்டங்கள் தயாரிக்க குழு அமைப்பு; முதல்வர் நிதிஷ்குமார்

பாட்னா: பீஹாரை முன்னேற்றும் வகையில் செயல் திட்டங்களைத் தயாரிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர்களும் பதவியேற்க, அவர்களுக்கான துறைகளும் அண்மையில் அறிவிக்கப்பட்டன.இந் நிலையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் பீஹாரை முன்னேற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டன என்று முதல்வர் நிதிஷ் குமார் கூறி உள்ளார். செயல் திட்டங்களை தயாரிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது; மாநிலத்தில் புதிய அரசாங்கம் அமைந்துள்ளதை அடுத்து தொழில்களை மேம்படுத்த, வேலை வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் விரைவாக பணிகளை தொடங்கியுள்ளோம். பீஹாரில் வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்த, தொழில்நுட்பம் மற்றும் சேவை சார்ந்த கண்டுபிடிப்புகளை கொண்ட புதிய யுக பொருளாதாரத்தை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்காக முன்னணி தொழில்முனைவோரிடமிருந்து பரிந்துரைகள் பெறப்படும். மேலும் அதற்கேற்ப திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படும். முக்கிய துறைகள், புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களின் ஒத்துழைப்புடன், பீஹாரை 'உலகளாவிய மையமாகவும், பணியிடமாகவும் உருவாக்கி அதை நிறுவ ஒரு விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்படும்.மாநிலத்தில் புதிய சர்க்கரை ஆலைகளை நிறுவ, பழைய மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை மீண்டும் தொடங்க கொள்கை மற்றும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனுடன், மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களையும் மேம்படுத்தவும் அழகுபடுத்தவும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாநிலத்தை முன்னணிக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, இதற்காக பீஹார் செயற்கை நுண்ணறிவு இயக்கம்(Bihar Artificial Intelligence Mission) நிறுவப்படும். இந்த அனைத்து அம்சங்களிலும் செயல் திட்டங்களைத் தயாரிக்க, தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொழில்களை ஊக்குவித்தல் மற்றும் இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பான திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை இக்குழு கையாளும்.இவ்வாறு முதல்வர் நிதிஷ்குமார் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை