உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை: அத்வானி வெளிப்படை

பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை: அத்வானி வெளிப்படை

புதுடில்லி: ''அடுத்த பொதுத் தேர்தலில், பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் பங்கேற்க மாட்டேன். பிரதமர் பதவிக்கான பொறுப்பை விட, மிகப்பெரிய அந்தஸ்தை சங்க பரிவார் அமைப்புகளும், பா.ஜ., தொண்டர்களும், நாடும் எனக்கு அளித்துள்ளன,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, நேற்று நாக்பூர் வந்தார். அங்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் பாகவத்தைச் சந்தித்து, தான் விரைவில் துவக்கவுள்ள ரத யாத்திரை குறித்துப் பேசினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஊழலுக்கு எதிராக, விரைவில் ரத யாத்திரை நடத்த உள்ளேன். அதற்கு, மோகன் பாகவத்திடம் ஆசி பெறவே, நாக்பூர் வந்தேன். அவரைச் சந்தித்து ஆசி பெற்றேன். அவரும் என் யாத்திரைக்கு முழு ஆதரவு தெரிவித்ததோடு, யாத்திரை வெற்றி பெற வாழ்த்தினார். உடல் எடையைக் குறைக்க, நவீன அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள, பா.ஜ., தலைவர் கட்காரியையும் சந்தித்து நலம் விசாரித்தேன். கட்காரி, வரும் 24ம் தேதி டில்லி வருவார். அப்போது என் யாத்திரை குறித்த அறிவிப்பை வெளியிடுவார். அதன்பின்னரே யாத்திரைக்கான திட்டங்கள் தயாராகும்.

சோஷலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாளான அக்டோபர் 11ல், அவர் பிறந்த ஊரான பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சீதாப்தியாராவில் இருந்து என் யாத்திரை துவங்கலாம். 2008ல், மத்திய அரசுக்கு எதிராக நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, எம்.பி.,க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. இந்த ஊழல் விவகாரத்தை அம்பலப்படுத்திய, அப்போதைய பா.ஜ., எம்.பி.,க்கள் இருவரை சமீபத்தில் கைது செய்ததால், ஊழலுக்கு எதிராக யாத்திரை துவங்க முடிவு செய்தேன். அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. முதலில் நான் ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினராக இருந்தேன். அதன்பின் ஜனசங்கத்தில் சேர்ந்தேன். பின்னர் பா.ஜ.,வில் இணைந்தேன். இந்த அமைப்புகளில் இருந்தும், என் சக ஊழியர்களிடம் இருந்தும், பா.ஜ., கட்சித் தொண்டர்களிடம் இருந்தும், இந்த நாட்டிடம் இருந்து நான் பெற்றதெல்லாம், பிரதமர் பதவிக்கும் மேலானது. இவ்வாறு அத்வானி கூறினார்.

ரதயாத்திரை நடத்தும் திட்டம், அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற நிலையை உருவாக்க அத்வானி மேற்கொள்ளும் நிகழ்ச்சி என்றும், அதை ஆர்.எஸ்.எஸ்., ஏற்கவில்லை என்றும் பேசப்படுகிறது. இதற்கு பதில் அளித்த அவர், 'ரத யாத்திரையையும் பிரதமர் பதவியையும் இணைத்து பார்க்க வேண்டியதில்லை. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்தது வழக்கமான நடைமுறை தான்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை