| ADDED : டிச 08, 2025 06:42 AM
புதுடில்லி: விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளின் 610 கோடி ரூபாய் டிக்கெட் தொகையை திருப்பி செலுத்தி விட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.விமான ஊழியர்களின் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக கடந்த 6 நாட்களாக ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி விமான போக்குவரத்து இயக்குநரகமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதுகாப்பு விதிகளில் இருந்து அடுத்தாண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை அளிக்கப்பட்ட தளர்வு காரணமாக, மெல்ல மெல்ல விமான சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. நேற்று மட்டும் 1,650 விமானங்கள் இயக்கப்பட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.மொத்தம் உள்ள 138 இடங்களில் ஒரு இடத்தை தவிர்த்து பிற பகுதிகளுக்கு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 75 சதவீத விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று இரவுக்குள் பயணம் ரத்தானவர்களுக்கான டிக்கெட் தொகையை திருப்பி செலுத்த கெடு விதித்திருந்த நிலையில், 610 கோடி ரூபாயை ஒப்படைத்து விட்டதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.