போர்ட் பிளேர்: 7 அரசு அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமையை தெற்கு அந்தமான் நிகோபார் மாவட்டம் பெற்றுள்ளது.ஐ.எஸ்.ஓ.,
மக்கள் சேவைகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் நோக்கில் அரசு அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், அந்தமான் நிகோபார் தீவுகளின் தெற்கு மாவட்டத்தில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்திற்கு கடந்த 17ம் தேதி ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. துணை கமிஷனர்
இதற்கான சான்றிதழை அந்தமான் நிகோபார் தீவுகளுக்கான தலைமை செயலர் கேஷவ் சந்திரா, தெற்கு அந்தமான் மாவட்டத்தின் துணை கமிஷனர் அர்ஜுன் ஷர்மாவிடம் வழங்கினார். இதன்மூலம், இந்தியாவிலேயே துணை கமிஷனர் அலுவலகம் ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெறும் முதல் மாவட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சான்றிதழ் ஏன்?
இந்த மாவட்டத்தில் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டுள்ளன. சான்று வழங்குதல், நில வருவாய், சட்டம் ஒழுங்கு, பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு, மக்களின் குறைதீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் ஆன்லைனில் மனுக்கள் பெற்று, ஆன்லைன் மூலமே தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சிறப்பான பணிக்காகவே இந்த சான்றிதழ் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.அசத்தல்
அதேபோல, சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அலுவலகம், 2 உதவி கமிஷனர் அலுவலகம், 3 தாசில்தார் அலுவலகம் என மேலும் 6 அரசு அலுவலகங்களுக்கும் இந்த ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு நேரில் வரும் மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக, நிரந்தரமான நடைமுறைகள் உருவாக்கி செயல்படுத்தப்பட்டுள்ளன. நிலுவையில் இருக்கும் மனுக்களின் எண்ணிக்கை மிகக்கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. பெருமிதம்
இது குறித்து தெற்கு அந்தமான் மாவட்டத்தின் துணை கமிஷனர் அர்ஜுன் ஷர்மா கூறியதாவது:- மக்களின் பிரச்னைகளை தீர்த்து, அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் தெற்கு அந்தமான் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்து வருகிறோம். அரசின் நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம், என தெரிவித்துள்ளார்.