உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெகன் கட்சி வேட்பாளர் அறிவிப்பு; நகரியில் ரோஜா மீண்டும் போட்டி

ஜெகன் கட்சி வேட்பாளர் அறிவிப்பு; நகரியில் ரோஜா மீண்டும் போட்டி

அமராவதி: ஆந்திராவில் நடைபெற உள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் மே 13ம் தேதி லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, 25 லோக்சபா தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி, அதன் முடிவுகள் வரும் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதற்கிடையே, ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்., அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.கட்சியின் தலைவரும், முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டத்தின் இடுபுலுபயாவில் உள்ள அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நினைவிடத்திற்கு நேற்று தன் ஆதரவாளர்களுடன் சென்று வணங்கினார்.அதன்பின், அங்கு இருந்தபடியே அக்கட்சி சார்பில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை, அக்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார். அனைத்து சமுதாயத்தினரும் இத்தேர்தலில் போட்டியிடும் வகையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினர்களுக்கு மட்டும் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுஉள்ளன. குறிப்பாக, 84 சட்ட சபை தொகுதிகளுக்கும், 16 லோக்சபா தொகுதிகளுக்கும் இப்பிரிவினர் போட்டியிட உள்ளனர்.சட்டசபை தேர்தலில் புலிவெந்துலா தொகுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் களமிறங்க உள்ளார். இதேபோல் அமைச்சரும், திரைப்பட நடிகையுமான ரோஜாவுக்கு, நகரி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்