ராஞ்சி: “வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், பி.எல்.ஓ., எனப்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வீட்டுக்கு வந்தால், சிறிதும் தயக்கமின்றி அவரை வீட்டுக்குள் கட்டிப் போடுங்கள். நான் வரும் வரை வெளியே விடாதீர்கள்,” என, ஜார்க்கண்ட் அமைச்சர் இர்பான் அன்சாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீஹாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில், அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மூன்றாம் கட்டமாக, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு காங்கிரசைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். ஜம்தாரா மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இர்பான் அன்சாரி பேசியதாவது: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இந்த பணி உட்பட பல்வேறு நிர்வாக நடைமுறைகளுக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தடையாக உள்ளனர். வாக்காளர் சிறப்பு திருத்தம் என்ற பெயரில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வீட்டுக்கு வந்தால், சிறிதும் தயக்கமின்றி அவரை வீட்டுக்குள் வைத்து கட்டிப் போடுங்கள். அவர் வெளியில் வர முடியாதபடி வீட்டை பூட்டி விடுங்கள். நான் வரும் வரை அவரை வெளியே விடாதீர்கள். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கத்தான், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வருகின்றனர். அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்ட ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி ஜாம்தாரா மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அராஜகத்தின் உச்சம்! அமைச்சர் இர்பான் அன்சாரியின் பேச்சு மிகவும் பொறுப்பற்றது. நேரம் பார்க்காமல் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியில் ஓய்வின்றி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டிப்போடச் சொல்வது, வீட்டுக்குள் பூட்டி வையுங்கள் எனக்கூறுவது அராஜகத்தின் உச்சம். - நிஷிகாந்த் துபே லோக்சபா எம்.பி., - பா.ஜ.,