| ADDED : பிப் 22, 2024 07:08 AM
பீதர்: “காங்கிரஸ் கட்சியை அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயே அழிப்பார்,” என, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் கருத்து தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கர்நாடகாவின் பீதர் மாவட்டம், ஹும்னாபாத்தில் பீதர், கலபுரகி மாவட்ட பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:காங்கிரஸ் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், ராகுலும் சேர்ந்து கட்சியை மொத்தமாக அழித்து விடுவர். லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 28 இடங்களிலும், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.பீதர் மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளில், நான்கு தொகுதிகளில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இது தொண்டர்களின் முயற்சியால் சாத்தியமானது. மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பீதர், கலபுரகியில் கடந்த முறையை விட, இம்முறை அதிக ஓட்டுகள் பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய அமைச்சர் பகவந்த் கூபா பேசுகையில், '' பீதர் தொகுதிக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே வாய் கூசாமல் பொய் சொல்கிறார். பீதர் லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வெற்றி பெறும் என்று, மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை,'' என்றார்.