உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா: பல மொழிகளில் பேசி கலக்கும் பெண் வேட்பாளர்

கேரளா: பல மொழிகளில் பேசி கலக்கும் பெண் வேட்பாளர்

திருவனந்தபுரம் : கேரளாவின் ஏழு மொழிகள் நிலம் என்று அழைக்கப்படும் காசர்கோடு தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம், பல மொழிகளில் பேசி, பா.ஜ.,வின் பெண் வேட்பாளர் கவர்ந்து வருகிறார்.கேரளாவின் வடக்கே உள்ள காசர்கோடு தொகுதி, பாரம்பரியமாக கம்யூனிஸ்ட் ஆதிக்கம் உள்ளது. ஆனால், கடந்த தேர்தலில் காங்கிரஸ் இங்கு வென்றது.

அத்துப்படி

வரும் தேர்தலில், இந்த தொகுதியில், பா.ஜ., சார்பில் மகளிர் அணி நிர்வாகியான எம்.எல்.அஸ்வினி, 38, நிறுத்தப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே, தன் பிரசாரத்தை அவர் துவங்கிவிட்டார். அவர் செல்லுமிடத்தில் எல்லாம், மக்கள் அவரை தங்களுடையவர்களாக பார்க்கின்றனர். அதற்கு முக்கிய காரணம், அவர்களுடைய மொழியில் அவர் பேசுவது தான்.கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காசர்கோடு, ஏழு மொழிகளின் நிலம் என்றழைக்கப்படுகிறது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 82.07 சதவீதம் பேர் மலையாளம் பேசுபவர்கள். அதே நேரத்தில், 4,02 சதவீதம் பேர் கன்னடா, 8.08 சதவீதம் பேர் துளு, 1.8 சதவீதம் பேர் மராத்தி பேசுபவர்கள். இதைத் தவிர, 30,000 பேர் உருது, 25,000 பேர் கொங்கனி மொழி பேசுபவர்கள் உள்ளனர். பயாரி மொழி பேசுபவர்களும் உள்ளனர்.பிறப்பால் மலையாளியான அஸ்வினி, கர்நாடகாவில் வளர்ந்தவர். அதனால் மலையாளம், கன்னடாவில் மிகவும் சரளமாக பேசக் கூடியவர். பக்கத்து வீடுகளில் இருந்தவர்களிடம் இருந்து, தமிழ், ஹிந்தியை கற்றுக் கொண்டார். இதைத் தவிர, துளுவும் அவருக்கு அத்துப்படி. திருமணத்துக்குப் பின் காசர்கோடு வந்த அஸ்வினி, ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.பா.ஜ.,வின் மகளிர் அணி நிர்வாகியான அவர், மஞ்சேஸ்வரி பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். தீவிர அரசியலில் ஆர்வம் உள்ளவர். இந்த தொகுதியில் காங்கிரசின் தற்போதைய எம்.பி.,யான உன்னிதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜாம்பவான் எம்.வி. பாலகிருஷ்ணன் மாஸ்டர் ஆகியோரை எதிர்த்து அஸ்வினி களமிறக்கப்பட்டுள்ளார்.

நம்பிக்கை

பிரசாரத்துக்காக செல்லும் இடங்களில் மலையாளம், கன்னடா, துலுவில் மாறி மாறி சரளமாக பேசுகிறார் அஸ்வினி. இதனால், இந்தத் தொகுதி வாக்காளர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.இவ்வாறு மக்களுக்கு தெரிந்த மொழியில் அவர்களுடன் பேசுவதால், ஒரு அன்யோன்யம் ஏற்படுகிறது. இதனால் நிச்சயம் தேர்தலில் பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் அஸ்வினி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்புசாமி
மார் 25, 2024 08:54

இந்தியர்கள் குறைந்தது ஐந்து மொழிகள் கற்க வேண்டும். இல்லேன்னா இந்தி பூந்துரும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை