பெங்களூரு : நாட்டை பிரிப்பதாகக் கூறிய தேச துரோகிகளை சுட்டுக்கொல்லும் சட்டத்தை அமல்படுத்தும்படி கூறிய, முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, 15ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, தாவணகெரே போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர். அதேவேளையில், “எம்.பி., சுரேஷ் துப்பாக்கிக் குண்டுக்கு பயப்படமாட்டார்,” என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், சில நாட்களுக்கு முன்பு, 'நிதியுதவி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்கிறது. தென் மாநிலங்களுக்கு அநியாயம் இழைக்கிறது. எனவே, தென் மாநிலங்களை தனி நாடாக பிரிக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.இதற்கு நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, 'நாட்டை பிரிப்பதாக கூறிய தேச துரோகிகளை சுட்டுக்கொல்லும் சட்டத்தை அமல்படுத்தும்படி, பிரதமரை வலியுறுத்துவேன்' என கூறியிருந்தார்.இதனால் காங்கிரசார் கொதிப்படைந்து உள்ளனர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட பலரும் ஈஸ்வரப்பாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.'வன்முறையை துாண்டும் வகையில் பேசிய ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுக்கும்படி, தாவணகெரே போலீஸ் நிலையத்தில், தாவணகெரே நிஜலிங்கப்பா லே - அவுட்டை சேர்ந்த ஹனுமந்தா என்பவர் புகார் அளித்திருந்தார்.வழக்குப் பதிவு செய்த போலீசார், 'பிப்., 15ல் நேரில் ஆஜராகும்படி, நேற்று ஷிவமொகாவின் மலலேஸ்வரம் லே - அவுட்டில் உள்ள ஈஸ்வரப்பாவின் இல்லத்துக்கு, தாவணகெரே போலீசார் நேரில் கொடுத்துவிட்டுச் சென்றனர்.இந்நிலையில், பெங்களூரில் நேற்று துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:ஈஸ்வரப்பா, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதானால் கொல்லட்டும். அவரது பேச்சுக்கு நடுங்கும் ரத்தம் எம்.பி., சுரேஷ் உடலில் ஓட வில்லை. எங்களை சீண்டியவர்களுக்கு தகுந்த பாடம் கிடைத்துள்ளது.சட்டசபையில் எங்கள் தந்தை பற்றி ஈஸ்வரப்பா விமர்சித்திருந்தார். அதற்கான 'பாடம்' அவருக்கு கிடைத்துள்ளது. தற்போது ஈஸ்வரப்பா எங்கிருக்கிறார். எங்களின் முன்னோரான கெம்பே கவுடாவின் வரலாறு தெரியுமா?எங்களுக்கென்று தனிப்பட்ட வரலாறு உள்ளது. நாங்கள் காதில் பூவைத்துக் கொண்டு அரசியல் செய்ய வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
ஆசையை நிறைவேற்ற வாய்ப்பு
ஒரு வாரம் காங்., - எம்.பி., கெடுபெங்களூரில் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் நேற்று அளித்த பேட்டி:மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றவருக்கு, ஆதரவு தெரிவிக்கும் கட்சியை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா. இதனால் அவர் வாயில் இருந்தும், சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற, வார்த்தை தான் வரும். கன்னடர்கள் சார்பாக பேசியதால், என்னை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று, அவர் கூறி இருக்கலாம். ஈஸ்வரப்பாவை பா.ஜ.,வில் ஓரம்கட்டி உள்ளனர். நானும் கட்சியில் இருக்கிறேன் என்று காட்டுவதற்கு, இப்படி பேசி இருக்கலாம்.என்னை கொல்ல வேண்டும் என்ற ஆசையை, ஈஸ்வரப்பாவே நிறைவேற்றி கொள்ளட்டும். இன்னும் ஒரு வாரத்தில், அவர் எனக்கு நேரம் தரட்டும்; நானே அவரது வீட்டிற்கு செல்கிறேன். என்னை சுட்டுக்கொல்ல, அவருக்கு அனுமதி கொடுக்கிறேன். அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். தேவையில்லாத பேச்சுகள் மூலம், தொண்டர்களை துாண்டிவிட கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.