மகனை கொன்ற தாய்க்கு மனநல பாதிப்பு இல்லை
பெங்களூரு : 'கோவாவில், 4 வயது மகனை கொன்று, சூட்கேசில் அடைத்த தாய்க்கு மனநல பாதிப்பு இல்லை' என்று, அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.பெங்களூரைச் சேர்ந்தவர் சுச்சனா சேத், 39. இவரது மகன் சின்மய் ரமணன், 4. கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்த சுச்சனா, கடந்த மாதம் 6ம் தேதி கோவாவில் உள்ள, நட்சத்திர ஹோட்டலில் வைத்து மகனை கொலை செய்தார்.உடலை சூட்கேசில் அடைத்து, பெங்களூருவுக்கு காரில் வந்த போது கைது செய்யப்பட்டார். அவரிடம் கோவா போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் சுச்சனாவுக்கு, மனநல பாதிப்பு உள்ளதா என்பதை அறிய, கடந்த 2ம் தேதி அவருக்கு, உளவியல் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.அந்த அறிக்கையின் முடிவுகள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கோவா போலீசாருக்கு கிடைத்தது. அதில் சுச்சனாவுக்கு மனநல பாதிப்பு இல்லை என்றும், மன உளைச்சலுக்கு இதற்கு முன்பு, சிகிச்சை பெறவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.