| ADDED : நவ 19, 2025 08:06 AM
கவுகாத்தி: இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.அசாமின் கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; ஹிந்து என்பது ஒரு மதச் சொல் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கலாசாரத் தொடர்ச்சியில் வேரூன்றிய ஒரு நாகரிக அடையாளம். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தங்களது வழிபாடு முறைகளையும், பாரம்பரியங்களையும், விட்டுக்கொடுக்காமல், இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி, இந்திய முன்னோர்களை நினைத்து பெருமை கொண்டால், அவர்களும் இந்துக்கள்தான். பாரதத்தில் பெருமை கொள்பவர் அனைவருமே ஹிந்துக்கள் தான்.பாரதம் மற்றும் ஹிந்து என்பது ஒரு அர்த்தம் கொண்டவை. இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை. அதன் நாகரிக மரபே அதனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. பிறருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடங்கப்படவில்லை. பண்பாட்டை வளர்ப்பதற்கும், உலகின் தலைசிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் பங்களிப்பை வழங்கவே ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒன்றுபடுத்துவதே ஆர்எஸ்எஸின் நோக்கம், இவ்வாறு அவர் கூறினார். 3 நாள் பயணமாக அசாம் சென்றுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இன்று இளைஞர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். நாளை மணிப்பூர் செல்கிறார்.