உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்மநாபசுவாமி கோவில் பாதுகாப்பில் தீவிரம் :நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த முடிவு

பத்மநாபசுவாமி கோவில் பாதுகாப்பில் தீவிரம் :நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த முடிவு

திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ள நிலையில், கோவிலைச் சுற்றிலும் உள்ள தற்காலிக நடைபாதை கடைகளை அகற்றிட மாநகராட்சி முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்திப் பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பாதாள அறைகளில், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொக்கிஷங்களின் மதிப்பறிய, சுப்ரீம் கோர்ட் நியமித்த ஐந்து பேர் கொண்ட குழு, தற்போது இங்கு முகாமிட்டுள்ளது. ஆனால், பாதாள அறைகளிலுள்ள பொக்கிஷங்கள் மதிப்பீடு செய்யும் பணி எப்போது துவங்கும் என்பது, இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கோவிலுக்கு தற்போதுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பை விட அதிநவீன பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நகர போலீஸ் கமிஷனர் கோவிலைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் சாலையோர தற்காலிக கடைகளை அகற்ற மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து, மாநகராட்சியினர் அங்குள்ள நூறுக்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற முடிவு செய்துள்ளனர். வரும், 20ம் தேதிக்குள் அங்குள்ள கடைகளை அகற்றி விட்டு, நகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை அனுப்ப உள்ளார். மாநிலத்தில் விரைவில் ஓணம் பண்டிகை வர உள்ள நிலையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த பலரும் அங்கு பல கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய துவங்கி உள்ளனர். மேலும், கோவிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதை முழுவதுமாக தடுத்து நிறுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை