சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவை புறக்கணித்த ராகுல்: பாஜ விமர்சனம்
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கலந்து கொள்ளாததற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜ, அவர் எங்கு இருக்கிறார் என யாருக்கும் தெரியாது எனத் தெரிவித்துள்ளது.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆனால், இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்பி ராகுல் பங்கேற்கவில்லை.இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜவின் செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு விழாவில் ராகுல் கலந்து கொள்ளவில்லை. அவர் எங்கு இருக்கிறார் அல்லது அரசியல் சாசன நிகழ்வை ஏன் புறக்கணித்தார் என்பது யாருக்கும் தெரியாது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கும் துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கர்நாடகா பற்றி எரிகிறது. காங்கிரஸ் உயர்மட்டக்குழு எந்த முடிவும் எடுக்க முடியாமல் முடங்கிபோயுள்ளது.ராகுல் உடன் ஆலோசனை நடத்துவதே இதற்கு காரணம். அவர் நெருக்கடியைத் தீர்ப்பதில் போதுமான அக்கறை இல்லாதவராக காணப்படுகிறார். அதேநேரத்தில் உட்கட்சி மோதலால் சிக்கிய அரசு காரணமாக கர்நாடக மக்கள் தொடர்ந்து துன்பப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பாஜவின் ஷெஷாத் பூனவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இதுபோன்ற ஒரு முக்கியமான அரசியலமைப்பு தருணத்தில் அரசின் உயர் பதவியில் இருப்பவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், அரசியலமைப்பை பற்றி பேசும் காங்கிரசை காணவில்லை. எதிர்க்கட்சி தலைவரான ராகுல், கார்கேயையும் காணவில்லை.அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான நிகழ்வுகளை ராகுல் தொடர்ந்து புறக்கணிப்பது மிகவும் வெட்கக்கேடானது. இதுபோன்ற நிகழ்வுகளை அவர் புறக்கணிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த காலங்களில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளை அவர் புறக்கணித்ததை நாம் பார்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.