| ADDED : பிப் 20, 2024 01:31 AM
அமேதி கடந்த 2019 லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் அமேதி லோக்சபா தொகுதியில், காங்கிரசின் ராகுல் - பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானி போட்டியிட்டனர். இத்தொகுதி எம்.பி.,யாக மூன்று முறை பதவி வகித்த ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி, காங்., கோட்டையாக கருதப்பட்ட அமேதியை கைப்பற்றினார்.தற்போது இவர், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உள்ளனர். இந்தத் தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.இந்நிலையில், அமேதியில் நேற்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:எம்.பி.,யாக இருந்த போது, அமேதிக்கு ராகுல் எதுவுமே செய்யவில்லை. இதனாலேயே, யாத்திரையின் போது அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படவில்லை. அவரை வரவேற்க கட்சித் தொண்டர்கள் கூட வரவில்லை.ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் புறக்கணித்து, அமேதி மக்களை அவமதித்து விட்டனர். 2019ல், அமேதி மக்கள் காங்கிரசை வெளியேற்றினர். தற்போது தேர்தலுக்கு முன்னதாகவே, ரேபரேலி தொகுதியிலிருந்து, காங்., வெளியேறி உள்ளது. லோக்சபா தேர்தலில் அமேதியில், என்னை எதிர்த்து போட்டியிட ராகுலுக்கு தைரியம் இருக்கிறதா?இவ்வாறு அவர் கூறினார்.