வயநாடு : நிலச்சரிவில் சிக்கியவர்களின் 'மொபைல் போன் சிக்னல்' கடைசியாக எந்த இடத்தில் பதிவாகி உள்ளது என்பதை கண்டறிந்து, 'ட்ரோன்' புகைப்படம் மற்றும் ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் வாயிலாக வரைபடம் உருவாக்கி, காணாமல் போனவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, கேரள அரசு தெரிவித்துள்ளது.கேரளாவின் வயநாட்டில் கடந்த 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 264 பேர் காயம் அடைந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு நிறுத்தப்பட்ட மீட்புப்பணிகள், நேற்று காலை மீண்டும் துவங்கியது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை கிராமங்களை இணைக்க, 'பெய்லி' பாலம் கட்டும் பணி முடிவடைந்ததை அடுத்து, கனரக உபகரணங்கள், மீட்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் அப்பகுதிகளை சென்றடையத் துவங்கின. அப்பகுதியில் உள்ள வீடுகளை மூடியுள்ள மண் குவியல்கள் மற்றும் மரங்களை அகற்றினால், மேலும் பல உடல்கள் மீட்கப்படும் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்று மட்டும், 130 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏ.டி.ஜி.பி., அஜித்குமார் தெரிவித்தார். நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்கள் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு மீட்புப்படையினர் 40 குழுக்களாக பிரிந்து உடல்களை தேடி வருகின்றனர். மேலும், சாலியார் ஆற்றில் எட்டு போலீஸ் ஸ்டேஷன்களை சேர்ந்த போலீசார், உள்ளூர் நீச்சல் வீரர்களின் உதவியுடன் 40 கி.மீ., ஆற்றுப்பகுதியில் உடல்களை தேடி வருகின்றனர்.இவர்களை தவிர, கடலோர காவல் படை, கடற்படை மற்றும் வனத்துறையினரும் ஆற்றுப்பகுதிகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.வயநாடு கலெக்டர் மேகாஸ்ரீ கூறியதாவது:
நிலச்சரிவில் சிக்கியவர்கள் கடைசியாக இருந்த இடத்தை மொபைல் போன் டவர் வாயிலாக கண்டறிந்து வருகிறோம். அதன் அடிப்படையில், ட்ரோன் வாயிலாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து, ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப உதவியுடன், யார் யார் எங்கெங்கு இருக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்து அந்த இடங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த உள்ளோம். ட்ரோன் வாயிலாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீட்புக் குழுவுக்கு அளித்து, அதில் குறிக்கப்பட்டுள்ள இடங்களில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தி உள்ளோம். இனி மீட்புப் பணி துல்லியமாகவும், வேகமாகவும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், 'தெர்மல் ரேடார் ஸ்கேனர்' எனப்படும், வெப்பத்தைக் கண்டறியும் ரேடார் கருவியையும் மீட்புக் குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் ஏதாவது மறைவிடங்களில் பதுங்கியிருந்தால், அவர்களது சுவாசத்திலிருந்து வெளியாகும் வெப்பத்தை வைத்து, அவர்களது இருப்பிடத்தை அறிவதற்காக இந்த கருவி, ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. தற்போது வயநாட்டில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களையும் கண்டறிய இந்த கருவி பயன்படுத்தப்படுகிறது. 100 வீடுகள்
இதற்கிடையே, காங்., எம்.பி., ராகுல் மற்றும் பிரியங்கா, பாதிக்கப்பட்ட மக்களை நேற்றும் சந்தித்தனர். அப்போது, காங்கிரஸ் கட்சி 100க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டித்தரும் என, ராகுல் உறுதி அளித்தார்.நிலச்சரிவில் இருந்து மீண்டவர்களின் மனநலனை பாதுகாக்க, 121 பேர் அடங்கிய மனநல மருத்துவர்கள், மருத்துவ உளவியலாளர்கள், சமூக பணியாளர்கள், ஆலோசகர்கள் அடங்கிய குழுவை கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் அமைத்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையில் கட்டுப்பாடு
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து, மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், 57,000 ச.கி.மீ., பகுதிகள், புவியியல் ரீதியாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கேரளாவில் மட்டும், 10,000 ச.கி.மீ., பகுதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக வயநாட்டில் உள்ள, 14 கிராமங்கள் இதில் உள்ளன. தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் மொத்தமாக, 56,826 ச.கி.மீ., பகுதிகள் இதில் உள்ளன. இது தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. புவியியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் பகுதி என அறிவிக்கப்பட்டால், அந்த பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும்.