உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகிலேயே பாதுகாப்பான விமானம் தேஜஸ்; ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் திட்டவட்டம்

உலகிலேயே பாதுகாப்பான விமானம் தேஜஸ்; ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் திட்டவட்டம்

புதுடில்லி: தேஜஸ் விமானம் உலகின் பாதுகாப்பான போர் விமானம். துபாய் சம்பவம் அதன் எதிர்காலத்தை பாதிக்காது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் கூறி உள்ளார்.துபாயில் விமான கண்காட்சி நடைபெற்ற போது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. வானில் சாகச நிகழ்வுக்காக தேஜஸ் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹிமாச்சல பிரதேசம் காங்ரா மாவட்டத்தை சேர்ந்த விமானி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார். விபத்தை தொடர்ந்து தேஜஸ் விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்தன.இந் நிலையில் தேஜஸ் விமானம் உலகின் பாதுகாப்பான போர் விமானம். துபாய் சம்பவம் அதன் எதிர்காலத்தை பாதிக்காது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் கூறி உள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சார்பில் தேசிய பாதுகாப்பு உச்சி மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; தேஜஸ் விமானம் நவ.21ம் தேதி விபத்துக்குள்ளானது, துரதிருஷ்டவசமானது. தேஜஸ் விமானத்தில் எந்த பிரச்னையும் இல்லை. மிகவும் அற்புதமான விமானம். முற்றிலும் பாதுகாப்பானது. உலகிலேயே சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டது. துபாயில் நாங்கள் கண்டது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். தேஜஸ் எதிர்காலத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். எங்களிடம் 180 தேஜஸ் விமானங்களை தயாரிப்பதற்கான ஆர்டர்கள் உள்ளன. நாடுகள் உள்நாட்டிலே தொழில்நுட்பங்களை உருவாக்கி வளர்த்துக் கொள்ளும் போது, பல கட்டங்களை கடந்து செல்கிறோம். நல்ல திறனுடன் கூடிய 4, 5 தலைமுறை விமானம் எங்களிடம் உள்ளது. இது மகத்தான வெற்றி. நாம் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும். எப்போதும் இதை மறுப்பவர்கள் கேள்விகளை கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். நாம் உலகளாவிய சந்தையில் வளர வேண்டும் என்பது அரசின் கொள்கை. இவ்வாறு சுனில் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை