| ADDED : ஜன 01, 2024 04:41 AM
மும்பை: மஹாராஷ்டிராவில் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை, 31 ஆண்டுகளுக்கு பின்கண்டறிந்து மும்பை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், 1989ம் ஆண்டு ராஜு சிக்னா என்பவரை கொன்ற வழக்கில் தீபக் பீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் தர்மேந்திரா சரோஜ் என்ற நபரையும் கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக் பீஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, 1992ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்த அவர் தலைமறைவானார்.நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகவில்லை. இதையடுத்து, 2003ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக தீபக் பீஸை, நீதிமன்றம் அறிவித்தது.இதன்படி, மும்பை புறநகர் பகுதியான கண்டிவாலியில் உள்ள தீபக் பீஸின் குடியிருப்புப் பகுதிக்கு சென்று போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அங்கு தீபக் பீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் இல்லை என்பதை கண்டறிந்தனர்.இதையடுத்து, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் தீபக் பீஸ் இறந்திருக்கலாம் என கூறினர்.எனினும், தீபக் பீஸை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டனர். சமீபத்தில், தீபக் பீஸ் மனைவியின் மொபைல் போன் எண், போலீசாருக்கு கிடைத்தது. அந்த எண்ணை, ஆய்வு செய்ததில் பால்கர் மாவட்டத்தின் நலசோபரா பகுதியில் அவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு நேற்று முன்தினம் சோதனை நடத்தியபோது, தீபக் பீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர். 62 வயதான தீபக் பீஸை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், ஒப்பந்தத்தின்படி மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார்.தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.