லோக்சபா தேர்தலில், குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், களமிறங்க வேட்பாளர்கள் கிடைக்காமல் பரிதவிக்கிறது.கர்நாடக சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது. பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துவதால், இம்முறை குறைந்தபட்சம் 20 தொகுதிகளையாவது கைப்பற்ற, காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது. தொகுதி வாரியாக ஆய்வு நடத்தி, வேட்பாளர்களை தேர்வு செய்கிறது. ஆனால் திறமையான வேட்பாளர் கிடைக்கவில்லை.மூன்று, நான்கு முறை ஆய்வு நடத்தியும், சாம்ராஜ்நகர், மைசூரு, விஜயபுரா, ஹாசன், பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, சிக்கோடி, தார்வாட், உத்தரகன்னடா, தட்சிண கன்னடா என 10 தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளர்களே இல்லை என்ற அறிக்கை வந்துள்ளது.மைசூரு, சாம்ராஜ்நகர் தொகுதிகளின் வெற்றி, முதல்வர் சித்தராமையா, சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பாவுக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது. இங்கு போட்டியிடும்படி மகாதேவப்பாவிடம் கூறியும், அவர் மறுக்கிறார். 'தேவையென்றால், தன் மகன் சுனில் போசுக்கு சீட் கொடுங்கள். அவரை வெற்றி பெற வைக்கிறேன்' என, கேட்கிறார். ஆனால் இவருக்கு சீட் கொடுப்பதில், கட்சிக்குள் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.தன் சொந்த மாவட்டமான மைசூரில், பா.ஜ.,வின் பிரதாப் சிம்ஹாவை தோற்கடிக்க வேண்டும் என்பது, முதல்வர் சித்தராமையாவின் எண்ணமாகும். ஆனால் இங்கு போட்டியிட வேட்பாளர் இல்லை. தன் மகன் எதீந்திராவை களமிறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவர் தோற்றால் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையும், முதல்வரை வாட்டி வதைக்கிறது.பெங்களூரு தெற்கில் சவும்யா ரெட்டியை களமிறக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் இவரது தந்தை அமைச்சர் ராமலிங்கரெட்டிக்கு, மகளை களமிறக்குவதில் விருப்பம் இல்லை. மிகவும் கட்டாயம் என்றால் மட்டும் களமிறங்கட்டும் என்கிறார்.பெங்களூரு வடக்கில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி., ராஜிவ் கவுடா போட்டியிட தயாராக இருக்கிறார். இங்கு சதானந்தகவுடா பா.ஜ., வேட்பாளரானால், ராஜிவ் கவுடாவின் வெற்றி கேள்விக்குறியாகும். எனவே இவரை களமிறக்க காங்., தயங்குகிறது.இதே போன்று, பல தொகுதிகளுக்கு யாரை வேட்பாளராக்குவது என, தெரியாமல் காங்கிரஸ் மேலிடம் குழப்பம் அடைந்துள்ளது.- நமது நிருபர் -