உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மாநகராட்சி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு மந்தம் நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை

 மாநகராட்சி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு மந்தம் நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை

புதுடில்லி: டில்லி மாநகராட்சியில் காலியாக உள்ள, 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஏராளமான முதியோர் காலையிலேயே ஆர்வமுடன் ஓட்டுப் போட்டனர். ஆனாலும், மாலை 4:00 மணி நிலவரப்படி 31.3 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி இருந்தன. மின்னணு ஓட்டு இயந்திரங்கள், 'சீல்' வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது. டில்லி மாநகராட்சியில் முண்ட்கா, ஷாலிமர் பாக் - பி, அசோக் விஹார், சாந்தினி சவுக், சாந்தினி மஹால், துவாரகா - பி, டிச்சான் கலன், நரைனா, தக் ஷின்புரி, சங்கம் விஹார், கிரேட்டர் கைலாஷ், வினோத் நகர் ஆகிய 12 வார்டுகளில் கவுன்சிலர் பதவி காலியாக இருக்கின்றன. இதில், ஒன்பது வார்டுகள் பா.ஜ.,விடமும், மூன்று வார்டுகள் ஆம் ஆத்மியிடமும் இருந்தன. ஷாலிமர் பாக் - பி வார்டு கவுன்சிலராக இருந்த ரேகா குப்தா, சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ராஜினாமா அதைத் தொடர்ந்து, டில்லி முதல்வராகவும் பதவியேற்றார். அதேபோல், பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்களாக இருந்தவர்கள் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தனர். காலியாக உள்ள 12 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. காலை 7:30 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு மாலை 5:30 மணிக்கு நிறைவடைந்தது. பா.ஜ., ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை என, 26 பெண்கள் உட்பட 51 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 143 இடங்களில் 580 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 2,320 தேர்தல் அலுவலர்கள், 2,265 பணியாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்கு 580 ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினர் பாதுகாப்பு பணிகளை கவனித்தனர். மாலை 4:00 மணி நிலவரப்படி 31.3 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி இருந்தன. சாந்தினி மஹாலில் அதிகபட்சமாக 41.95 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. சங்கம் விஹார் -ஏ - 38.62, முண்ட்கா - 37.82, கிரேட்டர் கைலாஷ் - 20.87, துவாரகா- பி - 23.72, சாந்தினி சவுக் - 27.91, அசோக் விஹார் - 28.13, ஷாலிமர் பாக் -பி 28.28 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. பாதுகாப்பு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'சீல்' வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. ஆர்வம் மாநகராட்சி இடைத்தேர்தலில் இளைஞர்களை விட, ஏராளமான முதியோர் ஆர்வமுடன் காலையிலேயே வந்து தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்தனர். ஓட்டுப்போட, தன் மனைவி சரோஜாவுடன் வரிசையில் நின்று கொண்டிருந்த சதீஷ்,88, கூறுகையில், “நான் எந்த தேர்தலையும் புறக்கணித்தது இல்லை. காலையிலேயே வந்து ஓட்டுப்போட்டு விடுவேன். நாட்டின் முன்னேற்றத்துக்கு தேர்தல் மிகவும் அவசியம். இளைஞர்கள் அதைப் புரிந்து கொண்டு, தேர்தல்களில் தவறாமல் ஓட்டுப்போட வேண்டும். இளைஞர்களிடம் புதிய யோசனைகளும், சிந்தனைகளும் உள்ளன. அதை அவர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் இளைஞர்களிடம் தான் உள்ளது. எனவே, ஜனநாயக கடமையை புறக்கணிக்கக் கூடாது,”என்றார். அதேபோல், கிஷோர்,69, கூறுகையில், “நமக்கான சரியான பிரதிநிதியை தேர்ந்தெடுக்க நாம் தவறாமல் ஓட்டுப்போட வேண்டும். நாம் ஓட்டுப்போடா விட்டால் நம் கவுன்சிலர் என்ன செய்கிறார் என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும். நாம் தேர்ந்தெடுத்தால் தான் அவருடைய செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும்,”என்றார். வளர்ச்சியை தீர்மானிக்கும் ஷாலிமர் பாக் ஓட்டுச்சாவடியில் முதல்வர் ரேகா குப்தா தன் குடும்பத்தினருடன் வந்து ஓட்டுபோட்டார். அப்போது, நிருபர்களிடம் ரேகா கூறுகையில், “ஜனநாயகக் கடமையை யாரும் தவறவிடக்கூடாது. ஓட்டுப் போடுவது ஜனநாயகத்தின் புனிதமான செயல்முறையின் ஒரு பகுதி. இந்த தேர்தல், மாநகராட்சியின் நிர்வாகத்தை தீர்மானிப்பது மட்டுமின்றி, டில்லி மாநகரின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் முடிவு செய்யும்,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி