உள்ளூர் செய்திகள்

புதிய தொழில் துவங்க நிதி தடையல்ல!

கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான மவுசு மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த உற்பத்திக்கு நம் நாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதும் இத்தகைய மாற்றத்திற்கு ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளது. மெக்கானிக்கல் போன்ற துறைகளிலும் இத்தகைய வளர்ச்சி காணப்படுகிறது. சில கோர் இன்ஜினியரிங் நிறுவனங்கள் ஐ.டி., துறைக்கு இணையான ஊதியத்தில் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்துகின்றன. அடுத்தகட்ட வளர்ச்சி, பதவி உயர்வு குறித்தும் விரிவாக பணி நியமன கடிதத்தில் குறிப்பிடப்படுகின்றன. சம்பளத்துடன் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளும் அதிகளவில் கோர் இன்ஜினியரிங் துறைகளில் வழங்கப்படும் தகவலும் இன்றைய பெற்றோர் மற்றும் மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. வேலை வாய்ப்பு திறன்களை மாணவர்கள் படிக்கும்போதே வளர்த்துக்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சிகளை இன்று கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. பெரும் நகரங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் ஊதியத்திற்கு இணையாக சிறு நகரங்களில் உள்ள கல்வி நிறுவன மாணவர்களும் பெறுகின்றனர். மற்றொருபுறம், வழக்கமான வேலை வாய்ப்புகளைவிட, புதியதாக தொழில் துவங்கும் ஆர்வம் இன்றைய இளைஞர்களிடம் கணிசமாக அதிகரித்துவருகிறது. தொழில்முனைவோராகும் மனப்பான்மை அதிகரிப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், நிதி உதவிகள், மானியம் மற்றும் இன்குபேஷன் மையங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியற்றை பிரதான காரணங்களாக கூறலாம். மேலும், பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களும் சுயமாக உள்கட்டமைப்பு வசதிகளை தங்களது வளாகங்களிலேயே ஏற்படுத்துகின்றன. இத்தகைய அம்சங்களால், தொழில்முனைவார்களின் எண்ணிக்கை உயரும்பட்சத்தில், வேலை வாய்ப்புகளும் கணிசமாக அதிகரிக்கும். பொதுவாக, புதிய தொழில் துவங்குவதில் தயக்கம் நிலவுவதற்கு, 'ரிஸ்க்' எடுக்கும் மனப்பான்மை குறைவாக இருப்பதே காரணம். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை - டி.எஸ்.டி., போன்ற அமைப்புகளின் நிதி உதவியால், அத்தகைய தயக்கம் களையப்படுகிறது. குறிப்பாக, எங்களது கல்வி நிறுவனத்தில் ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மற்றும் தொழில் நிறுவன வல்லுநர்களின் நேரடி ஆலோசனைகள் வழங்கப்படுவதால், மாணவர்களிடம் தொழில் துவங்குவதில் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.மேலும், ஏ.ஐ.சி.டி.இ., போன்ற அமைப்புகளும் மாணவர்களின் ஐடியாக்களை ஊக்குவிக்கும் வகையில் ' ஸ்டார்ட்- அப்' சார்ந்த 'ஹேக்கத்தான்' போட்டிகளை நடத்துவதால், மாணவர்களின் படைப்பாற்றல் திறன் வலுவடைகிறது.ஒரு வெற்றிகரமான தொழில்முனைவர் ஆக வெறும் கனவு மட்டும் போதாது. சிறந்த ஐடியா, சீரான உழைப்பு, உறுதியான செயல்பாடு, வெற்றிபெற வேண்டும் என்ற இடைவிடாத மனநிலை ஆகியவை இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும். தொழில் துவங்குவதற்கு, நிதி ஒரு தடை இல்லை என்பதே, இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்! -டாக்டர் பி.கிருஷ்ணகுமார், சி.இ.ஒ., மற்றும் செயலர், நேரு கல்வி நிறுவனங்கள், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !