சாத்தியம் சரியான வேலை!
சரியான வேலை கிடைக்கவில்லையே என இன்று பலரும் புலம்புவதை பார்க்கமுடிகிறது. இளம் பட்டதாரிகள் உட்பட 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. சரியான வேலை கிடைக்க என்ன செய்யவேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்வது நல்லது. இலக்கு நிர்ணயித்தல் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு இருக்கும். அதைத் தாண்டி ஒரு இயல்பு இருக்கும். இரண்டையும் ஒட்டி என்னென்ன வாய்ப்புகள் தன் முன்னே இருக்கின்றன; அவற்றிலிருந்து தனக்கு ஒத்துவரும் நல்லதொரு வாய்ப்பை எப்படி தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய சவால்தான். ஒவ்வொரு வேலைக்கும் உரிய பிளஸ் மைனஸ், கஷ்ட நஷ்டங்கள் உண்டு. நமது இயல்புக்கும், மனோபாவத்திற்கும் எதுசிறந்ததாக இருக்கும் என்று தேர்வு செய்யும் முதல்படியே பலரின் வெற்றியை தீர்மானிக்கிறது. அப்படித் தேர்வு செய்யும்போது இடர்பாடு ஏற்படுகின்றது என்றால் தம் இலக்கு சரியானதா என்ற சந்தேகம் வருவது நியாயம். இலக்கை அடையும் வழிதனை மாற்றலாமா என்று யோசிக்காமல் பலரும் இலக்கையே மாற்றும் எண்ணத்தில் உழல்கின்றனர். அங்குதான் சிக்கல் உருவாகிறது. இலக்கு, கண்முன்னே இருக்கும் வேலைவாய்ப்பு, அதற்கேற்ற தனது படிப்பு மூன்றும் ஒருஇணைக்கோட்டில் வருகிறதா எனப்பார்த்தல் இங்கே அவசியம். நான் யார்? தங்களுக்கு என்று தனிப்பட்ட கனவுகள் மட்டுமல்ல; இலட்சியங்கள், விருப்பங்கள், திறமைகள், ஆற்றல்கள், மதிப்பீடுகள், வாழும்முறை மற்றும் உத்வேகம் ஆகியவையும் நிச்சயம் அனைவருக்கும் உண்டு. அதன் அடிப்படையில் நான் யார் என்ற வினாவிற்கு பதில் கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் பலம் மற்றும் பலவீனம் உண்டு. தமது பலங்கள் என்ன? அவற்றை மேலும் அதிகரிப்பது எப்படி? இருக்கும் பலங்கள் இலக்குதனை அடைவதற்கு ஏற்றது தானா என்ற கேள்வியும் இங்கே முக்கியம். மேலும் தனது பலவீனங்கள் இலக்கை அடைய எப்படி தடையாக உள்ளன என்று கண்டறியவும் களையவும் வேண்டும். முழுமையாக தன்னை தானே யார் புரிந்துகொள்கிறார்களோ அவர்களால் சரியான, தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடிகிறது. சிறுவயதில் எடுக்கும் முடிவுகள்தான் வாழ்வினை தீர்மானிக்கிறது. ஆகவேதான் ‘எண்ணித்துணிக‘ என்கிறார் வள்ளுவர். கேள்விகள் ஏராளம் தங்களுக்கு பொருத்தமான வேலை என்ன என்பதை கண்டறிந்தாலே வெற்றியில் பாதியை அடைந்தது போலத்தான். அதன்பிறகு, பிடித்த வேலை செய்ய எப்படி என்னை தயார் செய்திட வேண்டும்? அந்த வேலைதனைப்பெற என்னென்ன வழிமுறைகளை, தடைகளை தாண்ட வேண்டும்? தொடர் படிப்பு தேவைப்படுமா? அந்த படிப்பு என்ன? எங்கே படிக்கலாம்? செலவு எவ்வளவு? என்ன தகுதி வேண்டும்? அதற்கு நுழைவுத்தேர்வு உண்டா? என ஏராளமான கேள்விகளுக்கு உரிய பதில் கண்டறிந்து தயார் செய்தல் முழுவெற்றி தருகிறது. இதைத் தான் ‘பிளான் ஆப் ஆக்ஷன்’ என்பார்கள். வேலை தேடுவோர் கூட்டத்தில் (நெட்வொர்க்) எப்படித்தொடர்பு வைத்தல் சாத்தியம்? ஆங்கில மொழியில் பேச சிரமம் என்றால் என்ன செய்தல் வேண்டும்? என பல்வேறு விதமான இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதில்தான் ஒருவரின் வெற்றி அடங்கி இருக்கிறது. என்ன கவலையும் குழப்பமும் வருகிறதா? இத்தனை கேள்விகளுக்கும் தெளிவும் பதிலும் கிடைத்ததாக எண்ணிப்பாருங்கள். நம்பிக்கையும் நல்வழியும் பிறக்கும். - டாக்டர். பாலசாண்டில்யன்