மனம் அலைபாயாமல் இருந்தால் சாதனை நிச்சயம்
கூடலூர்: மாணவர்கள் மனதை அலைபாய விடாமல் படிப்பில் நாட்டம் செலுத்தினால் பொதுத்தேர்வில் சாதிக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டது. கூடலூர் நர்த்தகி ஆடிட்டோரியத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கூறிய கருத்துக்கள்: வெங்கடாசலம், புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி (தமிழ்): முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். தமிழ் பாடத்தை முறையாக படித்து தேர்வில் தெளிவாக எழுத வேண்டும். பெயரளவுக்கு எழுதுவதை விடுத்து மனப்பாட பகுதிகளை நன்றாக படித்து தேர்வு எழுதுவதன் மூலம் பிற பாடங்களில் மனப்பாட பகுதி எளிமையாக இருக்கும். தேர்வில் காப்பியடிப்பதைவிடுத்து திட்டமிட்டு படித்து தேர்வு எழுத வேண்டும். ராமச்சந்திரன், பிதர்காடு அரசு மேல்நிலைப்பள்ளி (வணிகவியல்): முயற்சி இல்லாவிட்டால் வெற்றி கிடைக்காது. எனவே, சந்தேகம் இல்லாமல் விடையளிக்க கற்றுக்கொண்டால் காலவிரயத்தை தவிர்க்கலாம். ஒரு மதிப்பெண்களுக்கான விடைகளை மட்டும் மனப்பாடம் செய்து எழுத வேண்டும். நன்றாக புரிந்து படித்தால் கணிக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்கள் மிக எளிமையாக இருக்கும். ஜார்ஜ், அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலம்): எதிர்கால வாழ்க்கைக்கு ஆங்கில அறிவு மிக தேவையான ஒன்றாகும். மேல்படிப்பு படிக்கும்போது அனைத்து பாடங்களும் ஆங்கில வழியில் இருக்கும் பட்சத்தில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள தினசரி ஆங்கில செய்திகளை கூர்ந்து படிக்க முயற்சிக்க வேண்டும். மனப்பாட பகுதிகளை முறையாக கற்று மனப்பாடம் செய்ய வேண்டும். சரியான விடைகளில் அதன் முக்கிய பகுதிகளை அடிக்கோடிட்டு காட்ட பழகிக் கொள்ள வேண்டும். கமலாநேரு, கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி (கணிதம்): கணிதம் எளிமையானது. வினா எண்களை வரிசையாக எழுதி பதிலுக்கான முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். நேர விரயம் ஏற்படுத்தினால் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடியாத நிலை ஏற்படும். படித்ததை சரியாக எழுதி பார்க்க வேண்டும். அடித்தல் திருத்தம் இல்லாமல் எழுதுவதும் விடா முயற்சியும், உழைப்பும் இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம். அமுதா, கூடலூர் ஜி.டி. எம்.ஓ., மேல்நிலைப்பள்ளி, (பொருளியல்): தேர்வின் போது நேரத்தை சரியாக பங்கிட்டு விடை எழுத வேண்டும். ஒரு மதிப்பெண் விடைகளுக்கு 30 நிமிடங்களும், 10 மதிப்பெண்கள் விடை எழுத ஒரு விடைக்கு 10 நிமிடமும் நேரத்தை செலவிட வேண்டும். விடையில் தவறு ஏதேனும் இருந்தால் அதுகுறித்து பல மணி நேரம் யோசனை செய்ய கூடாது. வினாத்தாளை நன்றாக படித்துபார்க்க வேண்டும். அட்டவணை மூலம் தினசரி பாடங்களை படிக்கவும் வரைபடங்கள் மூலம் பதில் எழுதவும் முயற்சிக்க வேண்டும். படிக்கும்போது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை படித்ததை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். மகேஷ், ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி (கம்ப்யூட்டர் சயின்ஸ்): இப்பாடத்தில் வினாக்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பாட புத்தகத்தை தெளிவாக புரிந்து படித்துக் கொண்டால் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் எளிதாக வெற்றி காணலாம். விவேகானந்தன், கூடலூர் புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி (உயிரியல்): எவ்வளவு படித்தாலும் மதிப்பெண்கள் பெற இயலாது. மாறாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் திட்டமிட்டு படித்தலும் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். பாடங்களை முதலில் படித்து நினைவில் நிறுத்தி ஞாபகப்படுத்தி பார்த்து வெளிப்படுத்த வேண்டும். தவறுகளை கண்டறிவதுடன் படித்த பாடங்களை மீண்டும் திருப்பி படிக்க வேண்டும். விழிப்புணர்வுடன் மனதை அலைபாய விடாமல் படித்தால் சாதிப்பதில் எந்த தடையும் இருக்காது. சங்கர், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி (இயற்பியல்): ஆசிரியர்கள் கூறும் பாடங்களை தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர் கூறும் வினாக்களை முறையாக தெரிந்து கொண்டு தெளிவுபெற்று படித்தால் எளிதில் வெற்றி காணலாம். அய்யப்பன், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, (வேதியியல்): வேதியியல் பாடம் கடினமாக இருக்கும் என்ற பயத்தை முதலில் போக்க வேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு ஏற்ப முழு முயற்சியுடன் பாடங்களை தெளிவாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும். கேள்வியை முதலில் தெளிவாக படித்து பார்த்து பின்னர் விடையளிக்க வேண்டும். அதேபோல் பள்ளிகள் நடத்தும் பருவ தேர்வுகளை எழுதினாலே தேர்வில் வெற்றி பெற வழி வகை ஏற்படுத்தும்.