பிடிக்காத துறையை தேர்தெடுக்காதீர்கள்
இளைஞர்களிடம் காதலை சொல்லும் போது இருக்கும் உணர்ச்சியின் வேகம், துறையை தேர்ந்தெடுக்கும் போது இல்லை. பக்கத்து வீட்டு பையன் பொறியியல் படித்து, மென்பொருள் கம்பெனியில் கை நிறைய சம்பாதிக்கிறானா? நாமும் அப்படியே செய்வோம். இல்லை, எந்த படிப்புக்கு ‘ஸ்கோப்’ இருக்கிறது என கண்டுபிடித்து அதையே படிப்போம். அது எட்டிக்காயாக கசந்தாலும் பரவாயில்லை. காதலிக்கும் போது அப்படியா செய்கிறோம்? அந்தப் பெண்ணை பார்த்தவுடன் மனதில் மணி அடிக்கவில்லை? ஏன் காதலுக்கு காட்டும் மரியாதையை, வாழ்க்கைக்கு காட்டுவதில்லை. ‘வெந்ததை தின்று விதிவந்தால் சாவது‘ என ஒரு தலைமுறையே திசைமாறி போயிருக்கிறது. இன்று மென்பொருள் துறையில் பெருபான்மையினருக்கு வேலை பிடிக்கவில்லை. அதனால் தான் இளம்வயதிலேயே தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். 50 வயதில் வரவேண்டிய வியாதிகளை 30 வயதிலேயே வரவழைத்துக் கொள்கிறார்கள். இந்த ஆட்டு மந்தை கூட்டத்தில் விதிவிலக்காக ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு புவியியல் மேல் தீராத காதல். ‘எல்லாரையும் போல இன்ஜினியரிங் படிச்சிட்டு, கம்ப்யூட்டர் வேலைக்கு போடா‘ என அவன் தந்தை மன்றாடிப் பார்த்தார். மறுத்துவிட்டு, புவியியல் படித்தான். படிக்க படிக்க அதன்மேல் இன்னும் அதிகமாக காதல் வந்தது. வலைதளங்களில் பல கட்டுரைகள் எழுத ஆரம்பித்தான். தனக்குள்ள காதலை, வலைதள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான். அவனுடைய 23வது வயதில் புவியியலை மையமாக கொண்டு நடத்தப்படும் வெளிநாட்டு சேனலில் வேலை கிடைத்தது. அவனுடைய முதல் ஆண்டு ஊதியம் ஒரு கோடி ரூபாய். ஆனால் அதை விட முக்கியம். அவன் மனதுக்கு பிடித்த வேலையை செய்கிறான்.தினமும் வேலையை விட்டு வரும்போது உற்சாகமாக வருகிறான். மென்பொருள் துறையினர் வாரவிடுமுறை முடிந்தால் ‘ஐயோ அதற்குள் திங்கட்கிழமை வந்துவிட்டதே’ என அழுகிறார்கள்.அந்த இளைஞன் திங்கட்கிழமையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். காதலிக்காக காத்திருப்பவனை போல வேலைக்காக காத்திருக்கிறான். ஒரு ஒட்டகக்குட்டி தன் தாயிடம் கேட்டது: ‘நம் கால்கள் ஏனம்மா நீளமாக இருக்கின்றன?‘‘பாலைவன மண்ணில் நடக்கும் போது புதையாமல் இருக்கத்தான் அப்படி இருக்கிறது’ என்றது தாய்.‘முதுகின் மேல் பெரிய அமைப்பு இருக்கிறதே எதற்காக’ என்றது குட்டி. ‘பாலைவனங்களில் நீர் பல நாட்கள் கிடைக்காது. அதை சேமித்து வைக்கும் பகுதி அது‘ என்றது தாய்.இப்படி பல கேள்விகள். அனைத்துக்கும் தாய் ஒட்டகம் பதில் சொன்னது. ஆனால் அந்த குட்டி கேட்ட கடைசி கேள்விக்கும் மட்டும் அதனால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தகுட்டி கேட்ட கேள்வி: ‘பாலைவனங்களில் வாழ்வதற்காக படைக்கப்பட்ட நாம், உயிரியல் பூங்காவில் என்னம்மா செய்கிறோம்?’ என்றது. தேர்ந்தெடுத்த துறை மேல் காதல் இல்லாவிட்டால் அந்த ஒட்டகங்களை போல், சிறைபட்டு கிடப்பீர்கள். வேளாவேளைக்கு உணவு கிடைக்கும். ஆனால் வாழ்க்கையில் ஒரு நிறைவு இருக்காது. - வரலொட்டி ரெங்கசாமி