உள்ளூர் செய்திகள்

அழிவை நோக்கி கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள்?

வியாபார நோக்கில் தமிழக கடலோர பகுதியில் வளர்க்கப்படும் கப்பாபைக்கஸ் அல்வரேசி எனும் கடற்பாசி பிற கடல் தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.அபாயத்தை மேலும் வளர விடாமல் தடுக்க, இதை வளர்ப்பதற்கு முற்றிலுமாக அரசு தடை விதிக்க வேண்டும். அத்துடன், மன்னார் வளைகுடா பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் கப்பாபைக்கஸ் கடற்பாசியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது தான் கப்பாபைக்கஸ் அல்வரேசி. 20 ஆண்டுகளுக்கும் முன்பு மரைன் கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சி.எஸ்.எம்.சி.ஆர்.ஐ.,) மேற்கொண்ட ஆய்வின்படி, கப்பாபைக்கஸ் கடற்பாசி வளர்ப்பதில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்ததால், இந்தியாவில் முதன் முதலில் குஜராத் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டது.   தொடர்ந்து, தனியார் நிறுவனத்தின் ஊக்குவிப்பால் கடந்த 2002ம் ஆண்டில் தமிழக கடலோரப் பகுதிகளில், குறிப்பாக மன்னார் வளைகுடாவில் கப்பாபைக்கஸ் வளர்க்கப்பட துவங்கியது. முற்றிலும் வியாபார நோக்கில் வளர்க்கப்பட்ட இந்த கடற்பாசி, அப்பகுதி மக்களின் பகுதிநேர வருமானத்திற்கு வழிவகுத்தது. கப்பாபைக்கஸ்ன் உண்மையான முகம் தெரியாமல் கடலோர கிராமத்தில் சிலர் இதை இன்னும் வளர்த்து வருகின்றனர்.கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில், இரண்டு கிலோ மீட்டர் அகலம் வரையில் கப்பாபைக்கஸ் வளர்க்கப்படுகிறது. இந்த கடற்பாசியில் இருந்து கிடைக்கும் கராஜீனான் என்ற வேதியியல் பொருள் ஐஸ்கிரீம், லிப்ஸ்டிக் போன்றவை தயாரிக்க பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கப்பாபைக்கஸ் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அத்துமீறி அதிவிரைவாக வளரக்கூடிய குணாதிசயம் கொண்ட தாவரம்.எதிர்பார்த்த அளவில் பெரிய வருமானம் இல்லாததாலும், கப்பாபைக்கஸ் வளர்ப்பை கிராம மக்கள் குறைத்துக்கொண்டுள்ளனர். கடும் தீங்கு என்று தெரிந்தும் கூட அரசு முழுமையாக இதற்கு தடைவிதிக்கவில்லை. ஒரு சில கடலோரப் பகுதிகளில் வளர்க்கப்பட்டாலும் அது மற்றப் பகுதிகளுக்கும் கடல் நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது. பாக் ஜலசந்தியில் குருசடை, மானேலி, சிங்கில் உட்பட சில தீவுகளில் இவை தற்போது அதிவேகமாக வளர்ந்து வருகிறது. கடல் மேற்பரப்பிலும், சற்று தாழ்வாகவும் வலை போல் பின்னி வளர்ந்துகொண்டே செல்லும் கப்பாபைக்கஸ் சூரிய வெளிச் சத்தை சற்றும் கடலுக்கு அடியில் செல்லாமல் மறைத்து விடுகிறது. பவளப்பாறைகளை சூழ்ந்தும் வளரும் தன்மைகொண்டது. பவளப் பாறைகளை சுற்றி வளரும்போது உயிரினங்களால் பவளப்பாறைகளை நெருங்க முடிவதில்லை. மீன், நண்டு, சங்கு, நத்தை உட்பட நூற்றுக் கணக்கான கடல்வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கத்திற்கு பிரதானமான பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. இதனால், கடல்வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கம் கேள்விக்குறியாகி உள்ளன என்கிறார் எஸ்.டி. எம்.ஆர்.ஐ., இயக்குனர் பெட்டர்சன் எட்வர்ட். கப்பாபைக்கஸ் என் றொரு கடற்பாசி எவ்வளவு அபாயகரமானது என்பதை இந்த உலகமே உணரப்பட்டது... பசிபிக் மகாசமுத்திரத்தில் ஹவாய் தீவுகளை யொட்டியுள்ள கடல் வாழ் உயிரினங்கள், கடற்தாவரங்களின் அழிவிற்கு வித்திட்ட விவகாரம் விஸ்வரூபமானது. அமெரிக்க அரசு ஆண்டுக்கு பல லட்சம் டாலர்களை செலவழித்து வருகின்றபோதிலும் கப்பாபைக்கஸ் கடற்பாசியை முழுவதுமாக அழிக்க முடியவில்லை. காலநிலையை ஒப்பிடுகையில், ஹவாயைவிட தமிழக கடலோரப் பகுதிகளில் கப்பாபைக்கஸ் விரைவாக வளரும் என்று மன்னார் வளைகுடா பகுதியில் கப்பாபைக்கஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் பேராசிரியர் சந்திரசேகரன் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். கப்பாபைக்கஸ்ன் விபரீதம் உணரப்பட்டு வருகின்ற போதிலும், அமெரிக்கா போல பல கோடிக்கணக்கான ரூபாயை உடனடியாக செலவிட தயங்கும் நிலையில், தொழில்நுட்ப ரீதியாகவும் பின்தங்கியே உள்ளது மத்திய அரசு.மன்னார் வளைகுடா உட்பட தமிழக கடற்பகுதிகளும் கடும் பாதிப்படையாமல் தடுக்க, உடனடியாக கப்பாபைக்கஸ்க்கு தடை விதிக்க வேண்டும். -வெ.சதீஸ்குமார், பத்திரிக்கையாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !