உள்ளூர் செய்திகள்

புதுப்புது அடையாளங்கள்!

நேற்றைய முன்தினம் பச்சிளம் குழந்தை, நேற்று பாலகன், இன்று ஒரு நவயுவன் அல்லது யுவதி. பழைய அடையாளங்கள் மாறி புதுப்புது அடையாளகள் பிறக்கும் காலம் இது... இலையுதிர் காலம் முடிந்து வசந்த காலம் பிறப்பது போல! அன்று தட்டுத் தடுமாறி நடந்த போது, பெற்றோர் தாங்கிப் பிடித்து உதவியதால் இன்று விழுந்தாலும் எழுந்து நடக்கிறார்கள் பிள்ளைகள். அவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர் கற்றுக் கொடுத்ததை விட அவர்களது அனுபவமே அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருக்கும். பிள்ளைகள் கல்லூரிக் காலங்களில் நுழைவதும், கல்லூரி முடிந்து பணிக் காலங்களில் நுழைவதும் அவர்களுக்குப் புதிய அனுபவம், அதனை அவர்கள் பட்டு உணர பெற்றோரும், மற்றோரும் உதவ வேண்டும். ஒட்டகத்தின் மீது சுமத்தும் பாரங்களைப் போல சமூகப் பொறுப்புகள், எதிர்ப்பார்ப்புகள், கடமைகள், சட்ட திட்டங்கள், விதிமுறைகள் என்று பலவற்றை பிள்ளைகள் மீது ஏற்றியாகி விட்டது. இன்று பெரியவர்களின் பாரம் குறைந்து பிள்ளைகள் பாரம் அதிகமாகி விட்ட நேரம் எனலாம். இனி அவர்கள் சிறுவர்கள் இல்லை, பொறுப்பான இளைஞர்கள், சுயமாக சிந்திக்கக் கூடியவர்கள், தனியே வானில் பறக்க சிறகு கொண்டவர்கள். அவர்களுக்கு கண்காணிப்பு, கட்டுப்பாடு இனி தேவை இல்லை. நண்பர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனம் கொண்டவர்கள்! இந்த மாற்றம் நிகழும் சூழலில், அறிவுறுத்தும் பெற்றோரை எதிரியாகப் பார்ப்பதும், பக்குவமாகச் சொன்னால் நண்பர்களாக பாவிப்பதும் இயல்பு தான்.  பிடித்துக் கொண்டே ஓடி அவர்களை சைக்கிள் ஓட்ட வைத்தாகி விட்டது. இப்போது கையை எடுக்க வேண்டும். தானே வண்டி ஓட்டிப் பழகும் அவர்களை கம்பீரத்தோடு கர்வத்தோடு பார்த்து ரசிக்க வேண்டும். இது பெற்றோர் பங்கு. பிள்ளைகள் பங்கு என்ன தெரியுமா? தம்மிடம் இருக்கும் மற்றும் இல்லாத திறன்கள் என்ன, பலம் மற்றும் பலவீனம் என்ன, பெற்ற மதிப்பெண் என்ன, தமது கனவு மற்றும் இலட்சியம் என்ன, தமது பெற்றோரின் நிதி நிலை என்ன, தனது இலக்கை அடைவது எப்படி என்பதையெல்லாம் யோசித்துப் பிறகு அவற்றைப் பெற்றோருடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். அப்பாடா இவர்களை அனுப்பி விட்டோம் என்று பள்ளி நினைக்கும். அய்யோ புதிய நபர்கள் வந்து விட்டார்களே என்று கல்லூரி நினைக்கும். பிள்ளைகள் நாம் இனி குழந்தைகள் அல்ல என்று நினைப்பர். இவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்று பெற்றோர் கருதுவர். யார் இந்த மிடுக்கான யுவன் அல்லது யுவதி என்று சமூகம் பார்க்கும். இந்த புதிய அடையாள மாற்றத்திற்கு தயாரா? இது ஒரு அழகான காலம். வினாக்கள் மற்றும் கனாக்கள் நனவாகும் இனிய காலம். மகிழ்வோடு எதிர்கொள்ளுங்கள். புதிய அடையாளங்களுக்கு உண்மையாக இருங்கள்! - முனைவர் பாலசாண்டில்யன், balasandilyan@yahoo.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !