உள்ளூர் செய்திகள்

நாளையை உருவாக்கும் நற்பண்புகள்!

வாழ்வில் எப்போதும் நம் கூடவே வருவது நமது வெற்றி, தோல்விகள் அல்ல; மாறாக நமது நற்பண்புகள் தான்! நற்பண்புகள் எனும் குணாதிசயங்கள் தான் நமது மொத்த வாழ்வின் அடித்தளம்! நேர்மை, நாணயம், நம்பகத்தன்மை, விசுவாசம், கருணை, விடாமுயற்சி, கவனம், உறுதி, நம்பிக்கை என்று இவை எல்லாவற்றின் கூட்டமைப்பு தான் நற்பண்புகள் எனப்படுவது. நற்பண்புகள் நம்மை பிறரிடமிருந்து தரம் பிரித்துக் காட்டுகிறது. நற்பண்புகள் கொண்ட மனிதர்கள் மிகப்பெரிதாக பேசப்பட்டனர் என்பதற்கு சிறந்த உதாரணம் ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, அன்னை தெராசா, என ஏராளம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்ததொரு நற்பண்பு உண்டு. அது தான் நாம் யார் என்பதையும், நாம் என்னவாக ஆகப் போகிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது. இந்த பிரத்யேக நற்பண்பு எந்த சூழலிலும் நம்மை காத்து நிற்கிறது. நற்பண்பு பல்வேறு குணங்களை உள்ளடக்கியது என்றாலும், நாம் நேர்மையானவர் என்றால் பிறரின் நம்பகத்தன்மை நம் மீது அதிகமாகிறது. மேலும், நாம் பொறுப்புள்ளவராகவும், மனசாட்சி உள்ளவராகவும் வாழ்நாள் முழுதும் இருந்து வெற்றியைக் கொண்டு சேர்க்கிறது. நமது பணியில் நளினம் மற்றும் சீர்மை இருந்தால் மிகச் சிறந்த வேலைகள் நம்மைத் தேடி வரும். மக்கள் தங்கள் அறிவை நம்மோடு பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பர். கருணை நமது குணமாக இருந்தால் சுற்றங்களின் ஆசி நம்மை நாடி வரும். இன்றைய ஊடகங்கள், சுற்றுச் சூழல் சில சமயம் இளைய தலைமுறையினரை தவறான பாதைக்குச் செல்லத் தூண்டுகிறது. அதனால் தான் பள்ளி கல்லூரிக் கல்வியைப் பாதியில் விடுவது, சேராதோரிடம் சேர்வது, அடிதடியில் இறங்குவது, காழ்ப்புணர்ச்சி, இளம் பருவக்குற்றங்கள், நெறிமுறைகளை மீறுதல் என்று நிறைய காண்கிறோம். ‘ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது’ என்பார்களே, அப்படி அடிப்படையில் நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால் வாழ்நாள் முழுதும் நெறி தவறாது அவை நம்மைக் காக்கும்! நற்பண்புகள், மரங்கள் என்று வைத்துக் கொண்டால் நமது பழக்க வழக்கங்கள் தான் விதைகள். விதைத்தது தான் முளைக்கும். விதை தான் விருட்சம் ஆகும். நல்ல பழக்க வழக்கங்களை ஆரம்பித்திலேயே கடைபிடித்தால் அவை நற்பண்புகளை பெற்றுத் தரும், மேலும், அவையே நமது வாழ்வை நிர்ணயிக்கும்; சந்தேகம் வேண்டாம். எது கேட்டாலும், எது பார்த்தாலும், யார் சொன்னாலும், செய்தாலும் மாறாது நமது மனம் இருந்தால் நமது வாழ்வு மாறும் நல்ல திசை நோக்கி... காண்பவரிடம் எல்லாம் என்ன கற்கலாம் என்று உற்று கவனித்தால் நமது நற்பண்புகள் நிச்சயம் பலப்படும். வாழ்வில் வெற்றி புலப்படும். அவை வெகுநாள் பேசப்படும்! -முனைவர் பாலசாண்டில்யன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !