வரலாறு படி(டை)க்கலாமா?
வரலாற்று பாடத்தின் மீதான தவறான கண்ணோட்டம், மெல்ல மெல்ல சிதைந்து, வாய்ப்புகள் நிறைந்த படிப்பாக உருப்பெற துவங்கிவிட்டது! இதை உறுதிப்படுத்தும் விதமாக, சில கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட வரலாற்றுத் துறையை, தற்போது மீண்டும் செயல்படுத்த துவக்கியுள்ளன. கடந்தகால சம்பவங்களே ‘வரலாறு’ என்று மேலோட்டமாக சொல்லப்பட்டாலும், அதன்மூலம் பாதுகாப்பான மற்றும் பிரச்சினையில்லாத எதிர்காலத்திற்கான படிப்பினைகளை பெறுவது என்பதே, அதன் உண்மையான அர்த்தம்! வாய்ப்புகள் மற்றும் தகுதிகள்ஆசிரியர் பணி: பள்ளி அளவில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிய, வரலாற்று பாடத்தில் இளநிலை பட்டத்துடன், ஒரு பி.எட்., பட்டம் போதும். மேல்நிலை வகுப்பு ஆசிரியராக, பி.எட்., பட்டத்துடன் முதுநிலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் அல்லது பல்கலையில் வரலாற்று பேராசிரியராக பணிபுரிய, முதுநிலை பட்டத்துடன், பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும் அல்லது தேசிய அளவில் நடத்தப்படும் ‘நெட்‘ அல்லது மாநில அளவில் நடத்தப்படும் ‘செட்‘ தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். வரலாற்று ஆய்வாளர்/ எழுத்தாளர் பணி: கடந்தகால சம்பவத்தைப் பற்றி தெளிவாக ஆராய்ந்து, உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்தல், வரலாற்று ஆய்வாளரது முக்கிய பணி. வரலாற்று நிகழ்வுகள், உங்களை எப்போதுமே பரவசமடைய செய்தால், வரலாற்றை படிப்பதில் நீங்கள் பேரார்வம் கொண்டிருந்தால், நல்ல எழுத்து திறமையும் இருந்தால், நீங்கள் ஒரு வரலாற்று எழுத்தாளராக முடியும். பாடப் புத்தகங்கள் எழுதுவதோடு, செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளிலும் எழுதலாம். ஆராய்ச்சி கட்டுரைகளை, சர்வதேச ஜர்னல்களில் வெளியிடலாம். வரலாற்று படங்களுக்கு கதை, வசனமும் எழுதலாம். இதற்கு, வரலாற்றில், முதுநிலைப் பட்டம் அல்லது பிஎச்.டி., முடித்திருப்பது பெரும் உதவியாக இருக்கும். தொல்பொருள் ஆய்வாளர்: அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்படும் புராதன பொருட்கள், இடங்கள் மற்றும் கடந்த காலம் தொடர்பான ஆதாரங்களை பகுப்பாய்வு செய்தல் இவரது முக்கிய பணி. ஒரு சிறந்த தொல்பொருள் வல்லுனராக விளங்க, வரலாற்று பாடத்தில் ஆர்வம் மட்டும் போதாது. ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிப்பவராகவும், படைப்பு திறன் உள்ளவராகவும், நுணுக்கங்கள் அறிந்தவராகவும், தர்க்க ரீதியான சிந்தனை உள்ளவராகவும், கலையை விரும்புபவராகவும் இருக்க வேண்டும். அருங்காட்சியக பொறுப்பாளர்: வரலாறு தொடர்பான ஆய்வு, ஆவணப்படுத்தல் மற்றும் கண்காட்சி ஆகியவற்றில், தகவல்களை திரட்டுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் பொருட்களை பாதுகாத்தல் போன்ற பணிகளை இவர் செய்கிறார். மியூசியம், நூலகம், கேலரி போன்ற இடங்களில் பொறுப்பாளராக பணிபுரியும் வாய்ப்பும் உண்டு. மேலும், வரலாற்றாளர் மற்றும் அறிஞர்களுடன் கூட்டாக இணைந்து ஆராய்ச்சியும் நடத்துகிறார். ஆவண காப்பாளர்: அச்சிடப்பட்ட சேகரிப்புகள், ஓவியங்கள், புகைப்படங்கள், எழுத்துப் பிரதிகள், நிருபங்கள் உள்ளிட்ட பல வரலாற்று ஆவணங்களை திரட்டி சேமித்து வைக்குமிடம் ஆவணக் காப்பகம். இதை பராமரித்து, நிர்வகிக்கும் பொறுப்பு ஆவண காப்பாளரை சேரும். மேலும், ஆவங்களை மதிப்பிடுதல், திரட்டுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் பாதுகாக்கும் பணியும் அவருடையது. சிவில் சர்வீஸ் தேர்வுகள்: யு.பி.எஸ்.சி., நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முக்கிய தேர்வுக்கு, எப்போதுமே ஒரு சிறந்த விருப்பப் பாடமாக வரலாற்றுப் பாடம் உள்ளது. மேலும் மற்ற பல போட்டித் தேர்வுகளிலும் வரலாறு பயன்படுகிறது! பிற வாய்ப்புகள்: வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கலாசார விவகாரங்கள் பிரிவில் உள்ள வரலாற்று துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும், திரைப்பட தணிக்கைக்கான மத்திய வாரியம், தகவல்தொடர்பு அமைச்சகம், பாதுகாப்பு துறை, அனைத்திந்திய கைவினைப்பொருள் வாரியம், கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. கல்வி நிறுவனங்கள்: பெரும்பாலான அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் இளநிலை (பி.ஏ.,) வரலாற்று பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளை, நேஷனல் மியூசியம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹிஸ்டரி, கான்செர்வேஷன் அண்ட் மியூசியாலஜி, ஆவணக் காப்பக படிப்புகள் கல்வி நிறுவனம், இந்திய தேசிய ஆவணக் காப்பகம், காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம், ஒஸ்மானியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்க்கழகம், டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஹெரிடேஜ் அண்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகள்:* எம்.ஏ., -வரலாறு.* எம்.ஏ./பிஎச்.டி., - கான்செர்வேஷன் அண்ட் ரெஸ்டோரேஷன் ஆப் வொர்க்ஸ் ஆப் ஆர்ட்.* டிப்ளமோ - மியூசியம் அட்மின், மியூசியம் மாடலிங் அண்ட் மியூசியம் போட்டோகிராபி.* டிப்ளமோ - ஆவணக் காப்பக படிப்புகள்.* பி.ஜி., டிப்ளமோ - ஆவணக் காப்பக மற்றும் ஆவணப்படுத்தல் மற்றும் மேலாண்மை.* பி.ஜி., டிப்ளமோ - ஆவணக் காப்பக பராமரிப்பு, ரேப்ரோகிராபி சான்றிதழ் மற்றும் புத்தகமற்ற பிற பொருட்கள்.* பி.ஜி., டிப்ளமோ - ஆவணக் காப்பக அறிவியல் மற்றும் கையெழுத்துப்பிரதி இயல்.* பி.ஜி., - சான்றிதழ் - ஆவணக் காப்பகம்.* பி.ஜி., டிப்ளமோ - மியூசியாலஜி.* எம்.ஏ., - மியூசியாலஜி.* டிப்ளமோ - மியூசியாலஜி.