உள்ளூர் செய்திகள்

முன்னேற்ற பாதையில் இந்தியா உயர்கல்வித்துறை

இந்தியாவின் 11வது 5 ஆண்டுத்திட்டத்தில் உயர்கல்வியை மேம்படுத்த பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரம் வாய்ந்த மற்றும் அனைவரும் பெறும்படியான உயர்கல்வித்திட்டமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலமாக யூ.ஜி.சி.,யினால் அறிமுகம் செய்யப்படும் புதிய கல்வி முறையில் மாநில வாரியான சீரற்ற தன்மையை நீக்குதல் சமூக இடைவெளியை குறைத்தல் மற்றும் உள்ளார்ந்த பாடப்பகுதிகளை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும். இந்த தரமான உயர்கல்வி முறை நகரம் மற்றும் கிராமப்புறங்களை எட்டும் வகையில் அமைக்கப்படவுள்ளன. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்திலும் மத்திய பல்கலைக்கழகங்களை மாநிலம் வாரியாக நிறுவுதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மத்திய பல்கலைக்கழகம் இல்லாத ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்சம் ஒரு பல்கலைக்கழகத்தையாவது நிறுவவேண்டும் என்பதையும் 11வது 5 ஆண்டுத்திட்டம் வலியுறுத்துகிறது. இந்தியாவின் சராசரி மொத்தப் பதிவு விகிதத்தைவிட எந்தந்த மாவட்டங்களில் குறைவான விகிதம் உள்ளதோ அத்தகைய 374 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இங்கு புதிய கல்லூரிகளைத் திறக்கும் திட்டங்கள் உள்ளன. யூ.ஜி.சி., சட்டம் (1956)ன் கீழ் நிதிச்சலுகை பெறாத பழங்குடியின பகுதிகளில் பங்கீட்டு முறையில் நிதிச்சலுகை பெறும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. எஸ்.டி., மாணவர்களுக்கு புதிய ஸ்காலர்ஷிப் திட்டங்களும், உயர்கல்வி படிக்கும் மாணவியருக்கான ஹாஸ்டல்கள் கட்டும் திட்டங்களும் உள்ளன. பழங்குடியின மக்களுக்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கான சிறப்புப்பல்கலைக்கழக ‘இந்திராகாந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உருப்பெற்றுள்ளது. இதன் மாநில வாரியான கிளைகள் நாட்டின் பல பகுதிகளும் துவங்கப்படவுள்ளன. மாணவர்களின் ‘மொத்தப்பதிவு விகிதத்தை’ அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர்கல்வித்துறையின் வளர்ச் சிக்காக மத்திய அரசு ரூ.84 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இம்முன்னேற்றப்பணிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்வந்துள்ளன. இவை தவிர புதிய சீர்திருத்தங்களாக செமஸ்டர் முறை, மதிப்பெண் மாற்றும் முறை, சேர்க்கையில் பாரபட்சமற்ற தன்மை போன்றவற்றை ஆராய்ச்சிப் படிப்புகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !