பணியாளர் திறன்மேம்பாடு - இந்தியாவின் தேவைகள்
நவீன உலகில், மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. வாங்கும் திறன், பொருளாதார அளவு, 13 ஆயிரத்து 716 பில்லியன் டாலராக திட்டமிடப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கையில், வரும் 2030ம் ஆண்டு, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா திகழும். வரும் 2028ம் ஆண்டில், பணிபுரிவோர் எண்ணிக்கையில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முன்னேறிவிடும் என்று தற்போதைய புள்ளிவிபர நிலவரங்கள் தெரிவிக்கின்றன. நம்மிடம், பணிபுரியக்கூடிய வகையில் அதிக மனிதவளம் உள்ளது என்பது நமக்கு சாதகமே. அதேசமயம், வளமான எதிர்காலத்திற்கு, வெறுமனே இந்த எண்ணிக்கையை மட்டுமே நாம் நம்பியிருக்க முடியாது. நமது பொருளாதாரத்தில், பணிபுரியக்கூடிய 50 கோடி(தோராயமான) நபர்களை எடுத்துக்கொண்டால், அவர்களில், வெறும் 14% மட்டுமே, முறையான சட்ட விதிகளின்படி இயங்கும் தொழில் நிறுவனங்களில்(organised sector or formal economy) பணிபுரிகிறார்கள். மாறாக, 86% பேர், அமைப்பாக்கம் செய்யப்படாத நிறுவனங்களிலேயே(unorganised sectors) பணிபுரிகின்றனர். அதேசமயம், இதுமட்டுமே பிரச்சினையில்லை; அந்த 86% பேர், முறையான பயிற்சி பெறாதவர்கள் அல்லது வேலைவாய்ப்பு சந்தையின் அங்கீகாரத்தைப் பெறாதவர்கள் என்ற அதிர்ச்சிகர தகவல்களை, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட அந்த 86% பணியாளர்களுக்கு, திறன்களை வழங்குவதன் மூலமே, அவர்களை தகுதியுடையவர்களாக நாம் மாற்ற முடியும். இதனை நாம் செய்ய வேண்டுமெனில், அமைப்பாக்கம் செய்யப்படாத நிறுவனப் பணிகளை, சிறப்பானவைகளாக மாற்றி, செய்ததையே மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும் நிலையை மாற்ற வேண்டும். அதன்மூலம், அந்த வகைப் பணிகளை நோக்கி பட்டதாரிகள் ஈர்க்கப்படுவார்கள். தேவைக்கதிகமான மனித வளங்கள் நன்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். குறுகியகால பொருளாதார சிக்கல்களை, நீண்டகால பொருளாதார சிக்கல்களுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது என்ற உண்மையின் மீது கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். எனவே, குறைந்த உற்பத்தியுடைய வேளாண்மை போன்ற துறைகளிலிருந்து, அதிக உற்பத்தியுடைய தயாரிப்பு மற்றும் சேவைகள் போன்ற துறைகளை நோக்கி, பணியாளர்கள் நகர்தல் போன்ற விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக மாறுகின்றன மற்றும் வளரும் பொருளாதாரத்திற்கான திட்டத்தையும் செயல்படுத்த வேண்டியுள்ளது. இந்திய எதிர்காலத்தைப் பற்றிய சுகமான கனவுகள் மற்றும் நாட்டின் அபரிமிதான பொருளாதார வளர்ச்சிப் பற்றிய மதிப்பீடுகள் போன்றவை, தற்போதைக்கு நனவாகும் நிலையில் இல்லை. ஏனெனில், திறன்வாய்ந்த பணியாளர்கள் இங்கு மிகவும் பற்றாக்குறையாக உள்ளனர். இந்தியப் பணியாளர்களை, போதுமான திறன்வாய்ந்த நபர்களாக மாற்ற வேண்டிய கட்டாயத் தேவை இப்போது உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அமைப்புகள் இதுபற்றி வாயே திறப்பதில்லை. உலகத்தின் எந்தவொரு நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும், திறன்களும், அறிவுமே மிக முக்கிய காரணம். உயர்தர மற்றும் சிறந்த திறன் வளங்களைக் கொண்ட நாடுகள், உலக பொருளாதாரத்தில் ஏற்படும் சவால்களை சிறப்பாக சமாளித்து, கிடைக்கும் வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியப் பணியாளர் கூட்டத்தில், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதும், ஆண் - பெண் பாலின பாகுபாட்டை குறைப்பதும், இந்தியாவின் திறன்சார் சிக்கலைத் தீர்ப்பதில் முக்கியமான நடவடிக்கைகள். வேளாண்மைத் துறை பெரிய வேலை வாய்ப்பைக் கொண்டிருந்தாலும், அங்கே உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கிறது. தயாரிப்புத் துறையில் ஆட்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், அத்துறையில் கிடைக்கும் பணிகளால் பெறும் நன்மை சிறப்பாக இருக்கவில்லை. சேவைகள் துறை, நல்ல பயன்தரும் பணிகளை உருவாக்குகின்றன. இத்துறையில், பணிகளை உருவாக்கலுக்கும், அதன் பயனுக்கும் சரியான இடைவெளி இருப்பதில்லை. பணி பெறுவதில் இருக்கும் சவால் கல்வி, திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய மூன்றுக்கும் இடையே அதிக பொருத்தமின்மை நிலவுகிறது. வேலை வாய்ப்பு பெறுபவர்களில், குறைந்தளவு நபர்கள் மட்டுமே, முறையான பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். நல்ல வேலை வாய்ப்பை பெற்றிருக்கிற, சிறிதளவு வேலை வாய்பை பெற்றிருக்கிற மற்றும் வேலையே இல்லாத ஆகிய நிலைகளிலுள்ள 3 வகையான இளைஞர்களின் முன்னால் இருக்கும் வாய்ப்புகள் யாவை? மக்கள்தொகை பரவல் அடிப்படையில், வாய்ப்புகள் அளிக்கப்படுவது குறித்து திட்டமிட வேண்டும். வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாத மற்றும் சிறிதளவு மட்டுமே வேலை வாய்ப்பு பெற்ற நபர்கள், தங்களின் பாதையிலிருந்து மாறி, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன், சமூகத்திற்கு பெரிய பாரமாகவும் மாறிவிடுவார்கள். கொள்கையளவில், தகுதிக்கேற்ற பணிகளுக்கான பற்றாக்குறை என்ற நிலையை சுருக்குவது மற்றும் நிரந்தரமற்ற பணியாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்துதல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலமாக, மேற்கண்ட குறையை நிவர்த்திசெய்ய முயற்சிக்கலாம். Shared value -ஐ உருவாக்க, இந்தியா போன்ற நாடுகள் சவாலானவை. அதேசமயம், பொதுத்துறை, தனியார் துறை, என்.ஜி.ஓ.,க்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை, திறன்களுக்கான எகோசிஸ்டத்தை உருவாக்க இணைவதன் மூலம், அம்முயற்சி சாத்தியமாகும். திறன் மேம்பாடு என்பது, இந்தியாவில் அதிகரித்து வரும் தேவைகளை கருத்தில்கொண்டு மட்டுமே செய்யப்பட முடியாது; மாறாக, நாட்டின் எல்லையைத் தாண்டிய, உலகளாவியத் தேவையை கருத்தில்கொண்டு செய்யப்பட வேண்டியது முக்கியம். Boston Consulting Group for PHD Chamber of Commerce & Industry என்ற அமைப்பு நடத்தியுள்ள ஒரு ஆய்வின்படி, வரும் 2020ம் ஆண்டு வாக்கில், உலகில், 47 மில்லியன் அளவிற்கு பணியாளர் பற்றாக்குறை நிலவும். ஆனால், அந்த காலகட்டத்தில், இந்தியாவிலோ நிலைமை வேறாக இருக்கும். இங்கே, 56 மில்லியன் பணியாளர்கள் தேவைக்கு அதிகமாக எஞ்சியிருப்பார்கள். இப்படியான ஒரு அதிர்ச்சிகரமான தகவலை அந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. அந்த 2020ம் ஆண்டு வாக்கில், உலக பணியாளர்கள் எண்ணிக்கையில், இந்தியாவின் பங்களிப்பு கால் பாகமாக இருப்பதோடு, இந்திய பணியாளர்களின் வயது சராசரியும் 29 என்பதாக இருக்கும். ஆனால், இந்த வயது சராசரி அமெரிக்கா மற்றும் சீனாவில் 37ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே காலகட்டத்தில், 130 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படும் இந்திய மக்கள்தொகையில், 60% பேர், 15 - 59 வயதிற்குள் இருக்கும், பணிபுரியும் நபர்களாக இருப்பார்கள். இதன்மூலம், உலகின் மனிதவள ஆற்றல் மையமாக இந்தியா திகழும். இன்னும் சில ஆண்டுகளில், மனிதவள ஆற்றல் தேவைகளுக்காக, உலக நாடுகள் இந்தியாவை நாடத் துவங்கிவிடும். அந்த சமயத்தில், அடுத்த உலக அமைப்பின் வழிகாட்டியாகவும், சூப்பர்பவராகவும் இந்தியா திகழும். எனவே, திறன் மேம்பாட்டு விஷயத்தில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். இந்திய அரசாங்கம், திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து, அதை மேம்படுத்துவதற்கு தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டேயாக வேண்டியுள்ளது. பல்வேறான நிகழ்வுகளில், திறன் மேம்பாடு குறித்தும், வேலை வாய்ப்பிற்கு விரைவாக தயார்படுத்துதல் குறித்தும் அரசு வலியுறுத்தி வருகிறது. திறன் கட்டமைப்பு என்பதன் முக்கியத்துவம் உணரப்பட்டு, ஒரு பணியாளரின் நல்ல செயல்பாடு மற்றும் அவரின் சிறப்பான பங்களிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக அது பார்க்கப்படுகிறது. திறன் கட்டமைப்பு முயற்சிகள் மற்றும் தொழிற்கல்வி ஆகிய இரண்டையும், எதிர்கால சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைப்பதை உறுதிசெய்வதற்கான அவசரத் தேவை இப்போது இருக்கிறது. சமூக பிரச்சினைகள் மற்றும் விருப்பம் சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றில் அக்கறை செலுத்தி, இளம் வயதிலேயே, வழக்கமான கல்வி முறையிலிருந்து வெளிவர நினைப்போருக்கும், அதிகரிக்கப்பட்ட பணி வாய்ப்புகளை எதிர்பார்ப்போருக்குமான விருப்ப அம்சமாக, தொழிற்கல்வியை மாற்றுவதற்கான தேவை இருக்கிறது. தேசிய மற்றும் உலகளாவிய அமைப்புகளின் உதவியுடன், தேசிய திறன் மேம்பாட்டு அமைப்பு, மொத்தம் 50 கோடி நபர்களுக்கு(500 மில்லியன்), 2022ம் ஆண்டிற்குள், வேலை வாய்ப்பினை பெறும் வகையிலான திறன்களை அளிக்கும் விதமாக, ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பில், கடந்த 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷன்(NSDC), பெரும்பாலும் தனியார் துறை பங்களிப்பின் வாயிலாக, 2022ம் ஆண்டு வாக்கில், 50 கோடி நபர்களுக்கு, திறன் வளர்ப்பு பயிற்சியளிப்பதில், 30% பங்கை ஆற்ற வேண்டுமென்ற தனது நோக்கத்தில், தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை, அந்த அமைப்பு, 20 லட்சம் நபர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியை அளித்திருப்பதோடு, அவர்களில், பாதிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு, பணி வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுதொடர்பான தரநிலைகள், பாடத்திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டில் தர உறுதி ஆகியவற்றுக்கான ஒரு அத்தியாவசிய செயல்திட்டத்தை NSDC உருவாக்கியுள்ளது மற்றும் அதன் sector skill council -களுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறது. இதுதவிர, கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் துறைகளுக்குமிடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கில், விரிவான முறையில், தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் அதே வேளையில், ஏராளமான மாணவர்களுக்கு, தங்களின் வேலை வாய்ப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வழிகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவி வருவதோடு, இளைஞர்கள், தொழில்துறை குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்கான கால் சென்டர் ஹெல்ப்லைன் வசதியையும் கொண்டுள்ளது NSDC. திறன்வாய்ந்த பணியாளர்கள் அதிகரிப்பில், அரசும், தனது பங்களிப்பை வழங்கிக் கொண்டுள்ளது. 1,500 புதிய ஐ.டி.ஐ.,கள் மற்றும் DGET மூலமாக 50,000 புதிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதை அரசின் பங்களிப்பிற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறலாம். திறன் மேம்பாடு என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை ஏஜென்சிகளும், தங்களின் தொடர்ச்சியான மற்றும் பகுதிவாரியான செயல்பாட்டில் பல்வேறு சவால்களை சந்திக்கின்ற போதிலும், அதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து, தமது இலக்கை நோக்கி, தொடர்ச்சியாக பயணித்து வருகின்றன. - திலிப் செனாய், மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, தேசிய திறன் மேம்பாட்டு கார்பரேஷன்.