உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டில் சட்டம் படிக்க ‘எல்சேட்’!

சட்டம் படிப்பதற்காக, அயல்நாட்டுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய தேர்வு ‘எல்சேட்’ (லா ஸ்கூல் அட்மிஷன் டெஸ்ட்). அமெரிக்க சட்டப் பள்ளி சேர்க்கை கவுன்சில் (எல்சேக்) இத்தேர்வை வடிவமைத்துள்ளது. அமெரிக்கா, கனடா, மற்றும் வளர்ந்து வரும் பிற நாடுகளின் சட்டப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த சேர்க்கை செயல்முறை தேர்வு தான் ‘எல்சேட்’. பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையிலேயே வெளிநாட்டு சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றன. பொதுவாக, இளங்கலை பட்டப் படிப்பில் மாணவர்கள் பெற்ற செயல்திறன் மதிப்பெண்கள், மற்றும் எல்சேட் தேர்வு மதிப்பெண்கள் ஆகியவை மதிப்பீடு செய்யப்படுகின்றன. தேர்வு முறை: எல்சேட் தேர்வில் மாணவர்களின் மூன்று முக்கிய திறன்கள் மதிப்பிடப்படுகின்றன. அவை; லாஜிகல் ரீசனிங், அனலடிகல் ரீசனிங் (பகுப்பாய்வு திறன்களை மதிப்பீடு செய்தல்), மற்றும் ரீடிங் காம்பிரிஹென்சன் (நன்கு வாசித்தலுடன் புரிதல் திறன் போன்றவை அளவிடப்படும்). ஐந்து பிரிவுகளை கொண்டுள்ள இத்தேர்வு, ஒவ்வொரு பிரிவுக்கும் சுமார் 35 நிமிடங்கள் ஒதுக்கப்படும். பயிற்சி அவசியம்: சரிவரப் பயிற்சி பெறாமல் ‘எல்சேட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறைந்தது, தினமும் ‘எல்சேட்’ மாதிரி வினாத் தாள்களை கொண்டு பயின்றால் மட்டுமே இத்தேர்வில் வெற்றி பெற முடியும். அதிலும் லாஜிகல் ரீசனிங் மற்றும் அனலடிகல் ரீசனிங் போன்ற பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விடாமுயற்சியின் மூலமே எல்சேட் தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும். 120-180 மதிப்பெண்களுக்குள் எடுத்தால் மட்டுமே எல்சேட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியும். சராசரியாக 150 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்ற போதிலும், 160 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் தான் தலைசிறந்த 25 சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை அனுமதி பெறலாம். ஆண்டுக்கு நான்கு முறை பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறும். இத்தேர்வின் மதிப்பெண்கள் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். விண்ணப்பிக்கும் முறை: அனைத்துத் தேர்வு மையங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலே தேர்வெழுத இடம் கிடைக்கும் என்பதால் விரைந்து எல்சேக் இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே விருப்ப தேர்வு மையங்களைத் தேர்வு செய்ய முடியும். மேலும் விவரங்களுக்கு: www.lsac.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !