எம்.பி.ஏ., படிப்பும், அதற்கான உதவிகளும்
சுதந்திரத்திற்கு பின்பு, நிகழ்வுகள், மக்கள் மற்றும் அரசாங்க கொள்கைகள் ஆகிய அம்சங்கள், மேலாண்மை கல்வியை சிறப்பானதாக மாற்ற, ஒரு தனித்துவமான பாதையில் ஒருங்கிணைந்தது. இந்த தனித்துவ ஒருங்கிணைப்பின் விளைவாக, பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள் கடந்த 1950கள் மற்றும் 1960ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. நாட்டின் முதல் மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு, அரை நூற்றாண்டிற்கும் மேலாகிவிட்ட இன்றைய நிலையில், மேலாண்மை கல்வியானது பல்வேறான அதிரடி கால மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது. எம்.பி.ஏ., படிக்கும் பல மாணவர்கள், நீண்டகாலம் நோக்கம் கொண்டிருப்பவர்களாக உள்ளனர். சிலர், தங்களின் பதவி உயர்வுக்காகவும், சிலர் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்காகவும் இப்படிப்பை மேற்கொள்கின்றனர். MBA படிப்பு செலவு அதிகமான ஒன்றாக திகழ்ந்து வருவதையும் குறிப்பிட வேண்டும். அதுவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் இப்படிப்பை மேற்கொள்ள பல லட்சங்களை வாரியிறைக்க வேண்டியுள்ளது. இப்படிப்பை முடிக்க வேண்டுமென்ற ஆசை ஏராளமான மாணவர்களுக்கு இருந்தாலும், அதற்கு ஆகும் செலவுதான் பலருக்கு தடையாக இருக்கிறது. எனவே, பல மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் நிதியுதவியுடன் MBA படிப்பிற்கான செலவுகளை சமாளிக்கின்றனர். இன்றைய நிலையில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில், கல்விக்கடன்கள் தாராளமாக கிடைக்கின்றன. 2010-2011ம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும், பொதுத்துறை வங்கிகள், ரூ.15,207 கோடியை கல்விக் கடனாக அளித்துள்ளன என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. மானியங்கள் மற்றும் உதவித்தொகைகள் ஒரு மாணவரின் தகுதி மற்றும் பொருளாதார தேவைகளின் அடிப்படையில், உதவித்தொகைகளும், மானியங்களும் அளிக்கப்படுகின்றன. ஒரு மாணவருக்கு பல தகுதி நிலைகளின் அடிப்படையில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, சிறந்த செயல்பாடு, விளையாட்டில் சிறப்புத் திறன், கலைத்திறன், சமூக சேவை மற்றும் சிறந்த தலைமைத்துவ திறன் உள்ளிட்ட பலவிதமான அம்சங்களின் அடிப்படையில் அவருக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. MBA படிப்புக்கு வழங்கப்படும் மெரிட் அடிப்படையிலான உதவித்தொகைகள் மதிப்பு வாய்ந்தவை. மேலே குறிப்பிட்ட தகுதிகள் தவிர, குறிப்பிட்ட மதம், இனம், தேசியம் அல்லது கல்வி ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையிலும், குறிப்பிட்ட சதவிகித மாணவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. வணிகப் பள்ளி வளங்கள் பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், பலவிதமான உதவித்தொகை திட்டங்களை வைத்துள்ளன. Fellowship project -ல் பணிபுரிந்து அதற்காக நிதியுதவி பெறும் மாணவர்களை, பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், தங்களின் MBA படிப்பில் சேர்த்துக் கொள்கின்றன. மேலும், மாணவர்கள், கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கு பல வணிகப் பள்ளிகள் உதவி செய்கின்றன. ஒரு வணிகப் பள்ளியின் வலைதளத்திற்கு சென்று ஆராயும்போதும், படிப்பிற்கான நிதியுதவியைப் பெறும் வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்ளலாம். கார்பரேட் உதவி பல மேலாண்மை பள்ளிகளில் MBA படிப்பவர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் sponsor செய்யப்படுகிறார்கள். ஒரு நிறுவனம், தன்னில் பணிபுரியும், திறமையான, தகுதியான மற்றும் தான் முக்கியம் என்று நினைக்கும் நபருக்கு MBA போன்ற உயர்கல்வியை மேற்கொள்ள sponsor செய்கிறது. இதன்மூலம், பணியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆகிய இரு தரப்பாருமே பயனடைகின்றனர். நிறுவன sponsorship மூலம் MBA படிக்கும் ஒருவர், படிப்பு முடிந்தபின்னர், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணிபுரியுமாறு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால், இதில் ஒரு விஷயத்தை நன்றாக யோசிக்க வேண்டும். MBA படிப்பிற்கான உதவியைப் பெற்று, அதை முடித்தப்பின்பு, ஒப்பந்தப்படி, மேலும் சில வருடங்கள் அதே நிறுவனத்தில் பணியாற்றுவது உங்களின் எதிர்காலத்திற்கும், நீங்கள் நிர்ணயித்து வைத்துள்ள லட்சியத்திற்கு உகந்ததா? என்பதை ஒன்றுக்கு பலமுறை நன்கு யோசித்தப்பிறகே, செயல்படவும். ஏனெனில், சில தவறான முடிவுகள் உங்களின் வாழ்க்கையை பல ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிடலாம்.