உள்ளூர் செய்திகள்

ரெசிடென்ஷியல் வணிகப் படிப்பு எப்படிப்பட்டது?

ரெசிடென்ஷியல் மேலாண்மைப் படிப்பில் பங்கு பெறுவதென்பது ஒரு உற்சாகமூட்டும் அனுபவமாகும். அதன்மூலம் ஒரு மாணவரின் திறன்கள் சிறப்பாக மேம்படுகின்றன. இதன்மூலம் மாணவர்கள் குழுவாக சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. ஏனெனில், கடினமான பாடத்திட்டம் மற்றும் நெருக்கடியான deadlines ஆகியவற்றை சமாளிக்க, குழுவாக சேர்ந்து செயல்படுவது ஒரு நல்ல உத்தி. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் ஒன்றாக இருந்து படிப்பதன் மூலமாக, ஒத்துழைப்பு உணர்வும், ஆரோக்கியமான போட்டியும் ஏற்படுகின்றன. ஒரு மேலாளரின் பணித்தன்மை என்பது குழுவாக சேர்ந்து பணிபுரிவதே. எனவே, 2 வருட ரெசிடென்ஷியல் மேலாண்மை படிப்பு, ஒரு மாணவரை அந்த தன்மைக்கு தயார்படுத்துகிறது. ரெசிடென்ஷியல் படிப்பின்போது மாணவர்களுக்கு பல சிறப்பான அனுபவங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக கூற வேண்டுமெனில், ஒரு நாளின் வகுப்பு முடிந்தவுடன், அடுத்த நாள் ஒரு presentation -ஐ சமர்ப்பிக்குமாறு பேராசிரியர்களிடமிருந்து, மாணவர்களுக்கு தகவல் வரும். அந்த சவாலை எதிர்கொள்ள, மாணவர்கள் குழுவாக அமர்ந்து, இரவு நேரத்தில் கடும் உழைப்பை மேற்கொள்வார்கள். குரூப் பிரசன்டேஷன் என்பது பல தலைப்புகளில் இருக்கும். உதாரணமாக, அலுவலகத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, ஒரு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் முறை அல்லது சீனியர்களிடம் பேசும் முறை போன்றவை அவற்றுள் சில. ரெசிடென்ஷியல் எம்.பி.ஏ., படிப்பின் தனிப்பட்ட நன்மைகள் ரெசிடென்ஷியல் மேலாண்மை படிப்பு ஒரு விரிவான அனுபவத்தை தரும் என்று அதிகளவிலான எம்.பி.ஏ., ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இரண்டு ஆண்டு முழுநேர ரெசிடென்ஷியல் படிப்பு, ஒரு முழுமையான திறன் வளர்ப்பு அனுபவமாகும் மற்றும் அதில் மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான பலவிதமான வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். பலவிதமான பின்னணிகளிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் சொந்த ஆசிரியர்களைத் தவிர, பல்வேறு காரணங்களின் பொருட்டு சந்திக்க நேரும் வேறு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து பல்வேறான விஷயங்களை ரெசிடென்ஷியல் படிப்பை மேற்கொள்வோர் கற்க முடியும். ஒரு கல்வி நிறுவன வளாகத்தில் முழுநேரமாக தங்கியிருந்து படிக்கும்போது, இத்தகைய அனுபவம் கிடைக்கையில், ஆன்லைன் படிப்புகள் ஒரு மாணவருக்கு எப்படிப்பட்ட அனுபவங்களைத் தரும் என்பது சந்தேகமாக உள்ளது என்று சில ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில், முழுநேர அனுபவம் என்பது, பகுதிநேர அனுபவத்தைவிட நிறைய விஷயங்களை நமக்கு கற்றுத்தரும் என்பது ஒரு பொதுவான உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !