உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ., படிப்பை முடித்ததும் பணி வாய்ப்பு

ஒருவர் எம்.பி.ஏ., படித்து முடித்தவுடன், அவர் பணிக்கு தயாராகி விடுவாரா? என்ற கேள்விக்கு, அவர் 2 ஆண்டுகளில் பெற்ற பயிற்சியின் தரம் மற்றும் அவர் தனது திறமையை எந்தளவு வளர்த்துக் கொண்டார் என்பதைப் பொறுத்ததேயாகும். சகல வசதிகளும், நல்ல தரமும் கொண்ட ஒரு வணிகப் பள்ளியில் படித்து வெளிவரும் ஒருவர், கார்பரேட் நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் தன்னம்பிக்கையையும், திறனையும் பொதுவாகவே பெற்றிருப்பார். பணிபுரியும் இடத்தில் இருக்க வேண்டிய வியூக நுட்பங்கள், தொலைநோக்கு ஆகியவற்றைப் பெறுவதற்கான கேஸ் ஸ்டடி கற்றலை மேற்கொள்ளவும், சிறந்த கல்வி நிறுவனப் பின்னணி உதவும். ஒருவர் பணியைப் பெறுவதற்கு தயாராக இருக்கிறார் என்றால், அவர், ஆராய்ச்சி, அபாயங்களைத் தடுக்கும் உள்ளுணர்வு, தொலைநோக்கு மற்றும் தணியாத ஆர்வம் உள்ளிட்ட பண்புகளைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான எம்.பி.ஏ., பட்டதாரிகள் வெளிவந்தும், அவர்களில் குறைந்த சதவிகித நபர்களே நல்ல பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்றால், மேற்கூறிய தகுதிகளை வளர்த்துக் கொள்வதில் பலருக்கு ஆர்வம் இருப்பதில்லை என்று அர்த்தமாகிறது. வினாடி-வினா போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், பிரசன்டேஷன் மற்றும் செமினார் ஆகியவற்றில் ஒரு மாணவர் தனது படிப்பின்போது கலந்துகொள்வதன் மூலமாக, அவர் தனது CV -யில் சேர்க்கும் வகையில் தகுதியான அம்சங்களை அதிகரித்துக்கொள்ள முடியும். மேலும், லைவ் புராஜெக்ட்டுகள், பைனான்ஸ் அல்லது சோசியல் மீடியா அல்லது அனலிடிக்ஸ் ஆகியவற்றை கூடுதலாக மேற்கொண்டு, தனது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொருளாதார மந்தநிலையால், எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கான தேவை சுருங்கியுள்ளதா? நல்ல கவனம் மற்றும் நுட்பத்திறன் கொண்ட இளம் வணிக மேலாளர்களை, தொழில்துறை தலைவர்கள் எப்போதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் பெரிய பொறுப்பை ஒப்படைக்கவும் தொழில்துறை தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதேசமயம், அத்தகையப் பணிநிலையை அடைவதற்கான போட்டி மிகவும் அதிகம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எம்.பி.ஏ., முடித்தப் பிறகான ஆசிரியப் பணி ஆசிரியப் பணி என்பது விருப்பமும், லட்சியமும் சம்பந்தப்பட்டது. ஒரு எம்.பி.ஏ., பட்டதாரிக்கு அந்த விருப்பமும், லட்சியமும் இல்லாது இருக்கலாம். சிறந்த எம்.பி.ஏ., பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே இப்பணிக்கு வருவது சிறந்தது. ஏனெனில், கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவதைப் போன்று அதிகளவு வருமானத்தை ஆசிரியப் பணியில் எதிர்பார்க்க முடியாது. மிகவும் குறைந்தளவு எம்.பி.ஏ., பட்டதாரிகளே ஆசிரியப் பணியை தேர்வு செய்கிறார்கள். நல்ல கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணி கிடைக்க வேண்டுமெனில், பிஎச்.டி., பட்டத் தகுதி அவசியம். கார்பரேட் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒருவர் ஆசிரியப் பணியை மேற்கொள்ள விரும்பினால், அவர் நடைமுறை உலகின் பல வணிக அம்சங்களை வகுப்பறைக்குள் கொண்டுவந்து, மாணவர்களுக்கு கற்றுத்தர முடியும். ஒருவர் பிஎச்.டி., பட்டம் பெற்றிருந்தால், ஆசிரியர் பணியில் நல்ல முக்கியத்துவம் பெறுவதோடு, பல கல்வி நிறுவனங்களில் நிரந்தரப் பணி வாய்ப்பையும் பெற முடியும். ஏனெனில், கல்வி நிறுவன வட்டாரங்களைப் பொறுத்தவரை, பிஎச்.டி., நிறைவு செய்யாத நபர்களை, வெளியாட்களாகவே பார்க்கும் மனநிலை பல இடங்களில் உள்ளது. எனவே, நல்ல நிலையிலான ஆசிரியப் பணி மட்டுமின்றி, உயர்ந்த நிலையிலான கன்சல்டிங் பணி மற்றும் ஆழ்ந்த வணிக அறிவு தேவைப்படுகிற பணிகள் ஆகியவற்றை ஒருவர் பெற வேண்டுமெனில், அவர் பிஎச்.டி., தகுதியைக் கொண்டிருத்தல் மிகவும் சிறந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !