தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுத நடவடிக்கை
விழுப்புரம் : வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தோடு தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவோம் என சி.இ.ஓ., அறிவழகன் கூறினார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 93.71 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 27வது இடத்தைப் பெற்றுள்ளது.மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வியாண்டு துவங்கியது முதல் கல்வித்துறை பல முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளோடு கலந்துரையாடி, அவர்களின் கற்றல் திறனை அறிந்து ஊக்கப்படுத்தினோம்.மேல்நிலைப்பள்ளியில் தேர்ச்சி பெற்று, உயர்கல்வியில் சேர்ந்து பட்டம் பெற்றால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகள் மூலம் அரசு வேலைவாய்ப்புகளை பெறலாம் என மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தினோம்.வரும் கல்வியாண்டில் பெற்றோர்களை நேரில் பள்ளிக்கு அழைத்து, அவர்களோடு கலந்துரையாட முடிவு செய்துள்ளோம். அவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம், அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள், உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றி கூற உள்ளோம்.இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2 வாரங்களுக்கு ஒரு முறை பள்ளியளவில் பாட வாரியாக தேர்வுகளை நடத்தி, அவர்களின் கல்வித்திறனை கண்டறிந்து மேம்படுத்தினோம்.வரும் கல்வியாண்டில் வாரந்தோறும் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது தேர்ச்சி பெறாத மாணவர்கள், மனம் சோர்வடையாமல் உடனே சிறப்பு தேர்வு எழுதி வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சி.இ.ஓ., அறிவழகன் கூறினார்.