உள்ளூர் செய்திகள்

கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பெற்றோரால் பாதிக்கப்படும் பிள்ளைகள்

கோவை: மோட்டார் வாகனச் சட்டப்படி, 18 வயதானவர்களுக்கு மட்டுமே, ஓட்டுநர் உரிமம் வழங்க முடியும்; பள்ளி செல்லும் மாணவ, மாணவியராக இருந்தால், 16 வயதுக்கு மேல் இரு ஆண்டுகளுக்கு 50 சி.சி.,க்குட்பட்ட வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் அரசால் வழங்கப்பட்டு வந்தது; ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள தாய் அல்லது தந்தை, அந்த வாகனத்தின் பின்னால் அமர்ந்து வர வேண்டுமென்று நிபந்தனையும் தரப்பட்டது. இப்போதெல்லாம் 50 சி.சி.க்குட்பட்ட வாகனங்கள் தயாரிக்கப்படுவதில்லை என்பதால், அத்தகைய உரிமம் தரப்படுவதேயில்லை. ஆனால், இங்கே வாகனத்தில் "படம்" போடும் அனைவருமே, 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்தான். இவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனங்கள் அனைத்துமே, 50 சி.சி.,க்கும் அதிகமான திறன் கொண்டவைதான். சுருக்கமாய்ச் சொன்னால், பள்ளிப்பருவத்திலேயே சட்டத்தை மீற, இவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான அர்த்தம். இவர்களின் பெற்றோர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோருக்கும் வாகனம் வாங்கித்தர வசதி இல்லை என்பது அர்த்தமல்ல; அவர்கள் சட்டத்தை மதிப்பவர்கள்; தங்கள் குழந்தைகளும் மதிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள். இவர்கள் மட்டுமில்லை; கோவை நகரில், இவர்களைப்போலவே ஏராளமான மாணவ, மாணவியர், டூ வீலர்களில் அசுர வேகத்தில் பறக்கின்றனர்; மற்றவர்களை பதற வைக்கின்றனர். சுங்கம் அருகிலுள்ள ஓர் ஆண்கள் பள்ளிக்கு, 350 சி.சி., திறனுள்ள "புல்லட்" டில் வந்து மிரட்டுகிறான் ஒரு மாணவன். ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள ஒரு பள்ளிக்கு வரும் மாணவர்கள், குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி விட்டு, பள்ளிக்கு நடந்து செல்கின்றனர். அவிநாசி ரோட்டிலுள்ள இரு பாலர் பள்ளிக்கு அருகே நின்றால், ஒவ்வொரு டூ வீலரிலும் மூன்று மூன்று பேராய் வரும் காட்சியைக் காணலாம். உரிமம் இல்லாமல், வாகனங்களை ஓட்டி வரும் இவர்களை போலீசார் ஏன் பிடிப்பதில்லை? என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். அன்பு என்ற பெயரில், கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, குழந்தைகளை ஆபத்தோடு விளையாட விடும் பெற்றோர்களை என்ன செய்வது? சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும், இவர்களை வாகனங்களுடன் பள்ளிக்குள் அனுமதிக்கும் பள்ளி நிர்வாகங்களை யார் கண்டிப்பது?. இளம் தலைமுறையினர் சாதனை செய்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன...வீணாக இந்த விஷப் பரிசோதனை எதற்கு?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்