ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தொழில்: ஸ்ரீதர்வேம்பு பேச்சு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு தொழில் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் நடந்த இன்னோவேட் தமிழ்நாடு கருத்தரங்கில் சோகோ நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.தமிழக பா.ஜ., ஸ்டார்ட் அப் செல், எ.சி.ஐ.சி., கலசலிங்கம் இன்னோவேஷன் பவுண்டேஷன் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு பல்கலை வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். ஸ்டார்ட் அப் செல் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி முன்னிலை வகித்தார்.சோகோ நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு பேசியதாவது: மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, தன்னார்வம், தன் ஒழுக்கம் வேண்டும். தீய பழக்கங்கள் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது.இந்தியாவில் 800 மாவட்டங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு தொழில் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.நம்மை சுற்றியுள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் கவனிக்க வேண்டும். அதில் நம் நாட்டில் இல்லாதது எது என்பதை கண்டறிந்து, அதனை செய்தால் வளர்ச்சி ஏற்படும். இன்று நம் வளர்ச்சி ஒரு மில்லியன் டாலர் என்ற அளவில் தான் உள்ளோம். ஆனால் மைக்ரோ சாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் 250 மில்லியன் டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளனர் என்றார்.மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார் பேசுகையில், விடாமுயற்சியுடன் 24 மணி நேரமும் நாம் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு சூழலும் ஒரு பாடத்தை தரும். அதுவே நம்மை வெற்றி பெறச் செய்யும், என்றார்.கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை பேசுகையில், முடியும் என்ற மன தைரியத்துடன் பெண்களும், இளைஞர்களும், செயல்பட வேண்டும். உடல் நலனை சரியாக வைத்துக் கொண்டால் மனநிலையும் சரியாக இருக்கும் என்றார்.ஸ்டார்ட் அப் செல் பிரிவு துணைத்தலைவர் வி.வி.ஆர்.சுப்பிரமணியம், பல்கலை இணைவேந்தர் அறிவழகி, மாணவர்கள், தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர். பவுண்டேஷன் டைரக்டர் சேஷாத்திரி நன்றி கூறினார்.