உள்ளூர் செய்திகள்

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஏப்.26ல் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளிடம் தவறாக வழி நடத்தும் வகையில் அலைபேசியில் பேசியதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்த வழக்கில் ஏப். 26ல் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.2018ல் கல்லூரி மாணவிகளிடம் தவறாக வழி நடத்தும் வகையில் அலைபேசியில் பேசியதாக அருப்புக்கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு அப்போதைய எஸ்.பி.யும் தற்போதைய தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி.யுமான ராஜேஸ்வரி விசாரணை நடத்தி, ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.மார்ச் 14ல் விசாரணை அதிகாரியான ஐ.ஜி. ராஜேஸ்வரி சாட்சியமளித்தார். இதனையடுத்து ஏப். 1-ல் இறுதி கட்ட விவாதங்கள் நடந்தன. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஏப். 26ல் வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்