உள்ளூர் செய்திகள்

தேர்வு முறைகேடுக்கு சிறை தண்டனை

புதுடில்லி: போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில், வினாத்தாள் கசிவது, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. இது போன்ற மோசடிகளை திட்டமிட்டு செயல்படுத்துவதையே பல கும்பல்கள் தொழிலாக செய்து வருகின்றன.அரசு அதிகாரிகளும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு துணை போகும் சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன. இந்நிலையில், தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில், பொதுத் தேர்வுகள் மசோதா - 2024 லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவின்படி, போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மேலும், கணினி மயமாக்கப்பட்ட தேர்வு செயல்முறையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற, பொதுத் தேர்வுகளுக்கான உயர்மட்ட தேசிய தொழில்நுட்பக் குழு அமைக்க, இந்த மசோதா வழி செய்கிறது.தேர்வு மையங்களின் மின்னணு கண்காணிப்பை உறுதி செய்தல், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை வகுத்தல், தேசிய தரநிலைகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் போன்ற அம்சங்களை, இந்த குழு ஆராயும்.ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களை தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். இந்த மசோதா மீதான விவாதம் லோக்சபாவில் நேற்று நடந்தது. இந்த மசோதா மீது, எதிர்க்கட்சியினர் பரிந்துரைத்த சில திருத்தங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்