ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு: 50 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை
திருச்சியில் துவங்கிய ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் முதல் நாளில் 50 மாற்றுத் திறனாளிகள் சேர்க்கை பெற்றனர். தமிழகத்தில் 682 அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் 19,368 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கலந்தாய்வு திருச்சியில் 3 இடங்களில் நடைபெறுகிறது. ஜுலை 11ம் தேதி துவங்கிய இந்த கலந்தாய்வின் முதல் நாளில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 50 பேரும் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை ஆணையைப் பெற்றுக் கொண்டனர். ளஇன்று மாற்றத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. புதன்கிழமையன்று தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஆங்கிலம் என பிற மொழிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு ஜுலை 23ம் தேதி வரை நடைபெறுகிறது.