பண்ணாரியம்மன் கல்லுாரி ஒப்பந்தம்
கோவை: மாணவர்களின் திறன்மேம்பாட்டிற்காக பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் கோவையைச் சேர்ந்த ப்ளூயண்ட் பிளஸ் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, மாணவர்களுக்கு ஜப்பானியம் 'என்5' நிலை மற்றும் ஜெர்மன் 'ஏ' நிலை மொழிப்பயிற்சி, பல்வேறு தரநிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படவுள்ளது.இண்டோ - ஜப்பான் இண்டஸ்ட்ரி அகாடமிக் அலையன்ஸ் மற்றும் குளோபல் கனெக்ட் அமைப்பு ஆகியவற்றின் கீழ், ஜப்பான் மற்றும் ஜெர்மன் மன்றங்கள் நிறுவப்படவுள்ளன.இத்திட்டத்தின் வாயிலாக, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான வழிகாட்டல், பண்பாட்டு பரிமாற்ற நிகழ்ச்சிகள், நிபுணர் சொற்பொழிவுகள் மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்புகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.ஜப்பான் மற்றும் ஜெர்மனியிலுள்ள தொழில் நிறுவனங்கள், பல்கலைகளுடன் இணைப்புகள் உருவாக்கப்படுவதோடு, தகுதி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளன.