பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 4ஜி சேவை விரைவில் துவக்கம்
சென்னை: பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 4ஜி சேவையை விரைவில் வழங்க உள்ளது. இதனால், 2ஜி, 3ஜி, சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், சேவை மையத்தில் கொடுத்து, 4ஜி சிம் கார்டை விலையின்றி பெற்றுக் கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல்., தமிழக வட்டத்தின் தலைமை பொது மேலாளர் தமிழ்மணி தெரிவித்தார்.சென்னையில் நேற்று, அவர் அளித்த பேட்டி:நாட்டின் அனைத்து கிராமங்களிலும், 26,316 கோடி ரூபாய் மதிப்பில், 4ஜி சேவை வழங்க, 2022 ஜூலை 22ல் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக, தமிழகத்தில், 218 இடங்கள், 516 கிராமங்கள் கண்டறியப்பட்டன. அதில், 185 வருவாய் கிராமங்கள், காடுகள் சார்ந்த எட்டு கிராமங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இனி அனைத்து, 2ஜி, 3ஜி சிம் கார்டுகளையும், 4ஜி சேவை சிம் கார்டுகளாக மாற்ற உள்ளோம். அதனால், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள, 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை அருகில் உள்ள சேவை மையத்தில் கொடுத்து, புதிய சிம் கார்டுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தமிழ்மணி கூறினார்.பொங்கலுக்கு சலுகை*பொங்கல் சிறப்பு சலுகையாக, ஜன., 15 முதல் ஜன., 18 வரை நான்கு நாட்களுக்கு, 150 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்தால், முழு டாக் டைம் வழங்கப்படும்*90 நாட்கள் செல்லும் வகையில், 91 ரூபாய்க்கு சிறப்பு கட்டண வவுச்சர் அறிமுகம் செய்யப்படுகிறது*ரூ.2,999 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், அளவில்லா பேசும் வசதி, தினமும், 3ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., வசதியுடன், 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் சலுகை தரப்படுகிறது. வழக்கமாக, 365 நாட்களுக்கு வழங்கும் இந்த சலுகை, 30 நாட்கள் கூடுதலாக தரப்படுகிறது*பிரிபெய்டு வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல்., செல்ப் கேர் மொபைல் செயலியை பயன்படுத்தி, 249 ரூபாயக்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 2 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.